கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி
Updated on
2 min read

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளைத் தடுத்து நிறுத்தும்படி ஆந்திர அரசுக்கும், மத்திய அரசுக்கும் தமிழக அரசு அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அழுத்தம் தர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாகவும், திருவள்ளூர் மாவட்டத்தின் பாசன ஆதாரமாகவும் விளங்கும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணை கட்டும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகிலுள்ள ஆந்திர மாநில எல்லையான வெளியகரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றிலும், அதன் வரத்துக் கால்வாயிலும் மொத்தம் 5 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பருவமழை தொடங்குவதற்குள் இப்பணிகளை நிறைவேற்றி முடிக்க ஆந்திர அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதனால் அடுத்த சில வாரங்களுக்குள் 5 தடுப்பணைகளும் ஒன்றன்பின் ஒன்றாக கட்டி முடிக்கப்பட்டு விடும் என்றும் ஆந்திர அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதைக் கண்டித்து தடுப்பணை கட்டப்படும் வெளியகரம் பகுதியிலும், அதை ஒட்டி அமைந்துள்ள தமிழக எல்லையிலும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் திட்டம் விவசாயிகளுக்கு தெரிவதற்கு முன்பே அதுபற்றி உள்ளூர் அதிகாரிகள் மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பணை கட்டப்படுவதை தடுக்க தமிழக அரசு சிறு முயற்சியைக் கூட எடுக்கவில்லை. இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் போது கூட அப்போது பதவியில் இருந்த ஜெயலலிதா அரசு இப்படித்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இப்போதுள்ள அதிமுக அரசும் ஜெயலலிதா வழியில் நடப்பதாலோ என்னவோ, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தான் தமிழக மக்கள் மீதான அரசின் அக்கறை என்றால் இந்த அரசை தேர்ந்தெடுத்த மக்களை நினைத்து பரிதாபப்படத் தோன்றுகிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக தமிழகத்திற்கு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களுக்கு கொசஸ்தலை ஆறு தான் பாசன ஆதாரமாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி, தாமரைப்பாக்கம் அணை, வள்ளூர் அணை, வெளியகரம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றை நிரப்பும் கொசஸ்தலை ஆறு அதன் பின்னர் சென்னை எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது. கொசஸ்தலை ஆற்றில் அணை கட்டும் பணிகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தத் தவறினால் திருவள்ளூர் மாவட்டத்தில் பாசனத்திற்கும், சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைக் கட்டத் தொடங்கிய போது அதை பாமக நிறுவனர் ராமதாஸ்தான் முதன்முதலில் அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து பாமக சார்பில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், அதுவரை தமிழக அரசு உறங்கிக் கொண்டிருந்தது. உறக்கம் கலைந்து தமிழக அரசு விழித்துக் கொண்ட போது பெரும்பாலான தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டிருந்தன. இதனால் பாலாறு பாலைவனமாகி வருகிறது.

கொசஸ்தலை ஆற்றின் எதிர்காலமும் இதேபோல் ஆகிவிடக் கூடாது. திருவள்ளூர் மாவட்ட பாசன ஆதாரங்களையும், சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தும்படி ஆந்திர அரசுக்கும், மத்திய அரசுக்கும் தமிழக அரசு அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அழுத்தம் தர வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in