

சமூக கருத்துகளை தனது பாடல்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுச் சென்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 87-வது பிறந்ததினம் இன்று.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் எப்ரல் 13-ம் தேதி 1930 ஆம் ஆண்டு பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.
இவரது பாடல்களில் கிராமிய மணத்துடன,் பொதுவுடமை கருத்துகளும் நிறைந்ததாக இருக்கும். அதுமட்டுமல்ல திரைப்பட பாடல்களை எளிய நடையில் சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இவர் இயற்றியது மக்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை எளிதாக ஏற்று கொள்ள வழிவகுத்தது.
பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தனது முத்திரையை பதித்தார்.
இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், தொழிலாளர்கள் பிரச்சினை ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.
இவரது பாடல்களில் ’குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்’ , ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே தை பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம்’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியவை இன்றுவரை ஒலித்து கொண்டு இருகின்றன.
மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் 1959-ஆம் ஆண்டு மறைந்தார். வெறும் 5 ஆண்டுகள் மட்டு திரைத்துறையில் வாழ்ந்தாலும் பல ஆண்டுகள் நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்தி விட்டு மறைந்தவர் இம்மக்கள் கவிஞர்.