

சென்னையில் தொடர் மழையால் பல குழந்தைகள் வைரல் காய்ச் சலுக்கு உள்ளாவதையடுத்து, அவர்களுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. குறிப் பாக குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தி மருந்துகள் வழங்கப்பட்டன.
திரவ மருந்து பற்றாக்குறையா?
இருப்பினும் வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகளில் குழந்தைகள் சிகிச்சைக்கு சென்றபோது, 7 மாத குழந்தைக்கு பாராசிட்டமால் சிரப் (திரவ மருந்து) மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். சிரப் இல்லாத நிலையில் மருந்தாளுநர் மாத்திரையை வழங்கியுள்ளார். 7 மாத குழந்தை எப்படி மாத்திரை சாப்பிடும் என்று குழந்தையின் தாய் கேட்டபோது, திரவ மருந்து மருத்துவமனையில் இல்லை. அதனால் மாத்திரையை வழங்கு கிறோம் என்று பதில் அளிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரை கேட்டபோது, அனைத்து பகுதிகளிலும் தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் குழந்தைகளுக்கான திரவ மருந்து இல்லாமல் இருப்பது குறித்து ஆய்வு செய்து, அனைத்து மருத்துவமனைகளிலும் மழை காலத்தில் தோன்றும் அனைத்து நோய்களுக்கான மருந்துகளையும் போதிய அளவு இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.