பண்ருட்டி ராமச்சந்திரன் விலகல் பின்னணி

பண்ருட்டி ராமச்சந்திரன் விலகல் பின்னணி
Updated on
1 min read

விஜயகாந்தின் அரசியல் ஆலோசகர்போல் செயல்பட்டு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிகவில் இருந்து விலகியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆரம்பத்தில் கட்சியில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரிய அளவில் மரியாதையும் செல்வாக்கும் இருந்து வந்தது. பல விவகாரங்களில் அவரது ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. எல்லா விஷயங்களிலும் விஜயகாந்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் வழிகாட்டியாக இருந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது கூட பண்ருட்டியாரின் ஆலோசனைப்படிதான். தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக பெற்ற பிறகு, கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதனால், கடந்த ஓராண்டாகவே கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒதுங்கியே இருந்தார். தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே ஆளுங்கட்சியுடன் மோதல் போக்கை விஜயகாந்த் கையாண்டது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை. அதன்கார ணமாக இருவருக்கும் கசப்புணர்வு தொடங்கியது.

சமீபத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில்கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கட்சித் தலைமை, மூத்த நிர்வாகி ஒரு வரை அங்கு அனுப்பி, அவசரம் அவசரமாக பண்ருட்டியாரை அழைத்து வந்து பொதுக்குழுவில் பங்கேற்க வைத்தது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், தேமுதிகவினர் வெளிநடப்பு செய்தபோது, பண்ருட்டியார் அவையிலேயே தொடர்ந்து உட்கார்ந்திருந்தார். இதையடுத்து, கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடு அதிகரித்துவிட்டது. தொடர்ந்து தனது ஆலோசனைகளும் கருத்துகளும் கட்சியில் புறக்கணிக் கப்பட்டதால், வேறு வழியின்றி அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

‘கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இருந்ததும், பண்ருட்டியார் கூறிய சில முடிவுகள் எடுபடாமல் போனதுமே கட்சித் தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்படக் காரணமாக இருந்தது’ என தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சிலரே கூறினர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறும்போது, ‘‘நாங்கள் எந்தக் காரணத்துக்காக கட்சியில் இருந்து விலகி இருக்கிறோமா, அதே காரணத்துக்காகத்தான் பண்ருட்டியாரும் விரக்தி ஏற்பட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். பழுத்த அரசியல் அனுபவம் உள்ளவர் என்பதால், அவர் யாரையும் குற்றம்சாட்டாமல், அமைதியாக கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்’’ என்கின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in