Last Updated : 27 Feb, 2017 09:28 AM

 

Published : 27 Feb 2017 09:28 AM
Last Updated : 27 Feb 2017 09:28 AM

அடுத்த போராட்டக் களம் நெடுவாசல்: ஆய்வு செய்து முடிவெடுக்க விஞ்ஞானிகள் அறிவுரை

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் பரபரப்பை தொடர்ந்து, அடுத்த பரபரப்பாக உருவெடுத்திருப்பது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் விவகாரம்.

கார்பன் மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்த கலவைதான் ஹைட்ரோ கார்பன். நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தாவரங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இவை கிடைக்கும். எரிபொருள், ரசாயன கரைப்பான் ஆகியவை இதன் பயன்பாடு. சாயம், பூச்சிக்கொல்லி மருந்து, பிளாஸ்டிக் ஆகியவற்றின் மூலப் பொருளாகவும் அமைந்துள்ளது. பல்வேறு ஹைட்ரோ கார்பன்களின் கலவை பெட்ரோலியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் என்ன தொடர்பு?

ஹைட்ரஜன் அணுவுடன் சேரும் கார்பன் அணுவின் எண்ணிக்கையைப் பொறுத்து அதன் பெயர்கள் மாறுபடுகின்றன. ஒரு கார்பன் இடம்பெற்றுள்ள அமைப்புக்கு மீத்தேன், இரண்டு இருந்தால் ஈத்தேன், மூன்று புரோபேன் இப்படி 10 கார்பன் இருந்தால் டெக்கேன் என்று வரிசையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஹைட்ரோ கார்பன்கள்தான். எனவே, மீத்தேன் என்பது ஹைட்ரோ கார்பன் எனப்படும் பெரிய பிரிவின் கீழ் உள்ள சிறிய வகைப்பாடு என்பதை உணர முடியும்.

பாதிப்புகள்

வாகனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஹைட்ரோ கார்பன்கள் எரிபொருளாக பயன்படும்போது அதிலிருந்து வெளியாகும் நச்சுப் புகை காற்று மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும், புவி வெப்பமயமாதல் பிரச்சினையை அதிகமாக்கும். ஆனால், நெடுவாசலைப் பொறுத்தமட்டில் சுமார் 2500 மீட்டர் (8202 அடி) ஆழத்துக்கும் அதிகமாக நிலத்தைத் துளையிட்டு அதிகப்படியான நீரை வெளியேற்றும் நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் வற்றும் அபாயம் உள்ளது. இதிலிருந்து வெளியாகும் நச்சு தோல் வியாதிகள் மற்றும் புற்றுநோய்க்கு காரணமாக அமையும், விளைநிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

பிரச்சினை உருவானது எப்படி?

கடந்த பிப்.15-ம் தேதி நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்த எண்ணெய் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க 15 ஆண்டுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த தகவல் புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டுத் தீ போல பரவியது. இதுகுறித்து தகவல் வெளியான மறுநாளே நெடுவாசல் கிராம மக்கள் ஒன்றுகூடி இதைத் தொடக்கத்தில் இருந்து எதிர்க்க வேண்டுமென முடிவெடுத்தனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சோதனை பணியைத் தொடங்கியபோது கண்டுகொள்ளாது இருந்த மக்கள், எரிவாயு எடுக்க அனுமதி அளித்திருப்பதாக வெளியான தகவல்தான் கிளர்ச்சி அடைய வைத்தது. இந்த அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது டெல்டா மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம்தான். விவசாயிகளின் எதிர்த்து போராடியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதில் ஏற்பட்ட விழிப்புணர்வுதான் நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்க்க காரணமாக அமைந்துள்ளது.

பிப்ரவரி 16-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை ஆட்சியர் சு.கணேஷை நேரில் சந்தித்து, இத்திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு மனு அளித்தனர். பின்னர், தொடர்ந்து ஆர்ப்பாட்டம், தர்ணா என போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிவாயுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உள்ளூர் மக்களுக்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து, தற்போது கூலி வேலைக்குக்கூட செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், விவசாயி களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளையும், வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளையும் புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இதுதவிர, பிப்.28-ம் தேதி மக்கள் நலக் கூட்டு இயக்கம் சார்பிலும், மார்ச் 3-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் துண்டறிக்கைகளை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு எரிபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்களில் உள்ள குழாய் களில் இருந்து எரிபொருள் கசிகிறதா என ஆய்வு மேற்கொள்ள வந்த ஓஎன்ஜிசி அலுவலர்களை மக்கள் சிறைபிடித்தனர். மக்களின் கோபம் அதிகாரிகள் மீதும் திரும்பியுள்ளது.

விவசாயிகள் கருத்து

நெடுவாசலில் எரிபொருள் சோதனை மேற்கொள்ள குத்தகைக்கு நிலம் கொடுத்த விவசாயி கருப்பையா: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆய்வு செய்த ஓஎன்ஜிசி அலுவலர்கள் இங்கு மண்ணெண்ணெய் இருப்பதாக தெரிகிறது. ஆகையால், இந்த நிலத்தை ஆய்வுப் பணிக்கு கொடுங்கள். அதற்கு ஆண்டுக்கு குத்தகை அடிப்படையில் தொகை தருகிறோம் என்றார்கள். நானும் கொடுத்தேன். என்னைப் போல மேலும் 3 விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். எங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஆண்டுதோறும் தொகை கொடுத்து வருகின்றனர். எரிபொருள் சோதனை மேற்கொள்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டரில் எனது விவசாயத்துக்கான ஆழ்துளை கிணறு உள்ளது. இங்கு சுமார் 1.5 கிலோ மீட்டருக்குள் 21 ஆழ்துளை கிணறுகளை அமைத்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் எந்தப் பயிரையும் சாகுபடி மேற்கொள்வதற்கு ஏற்ப வளமுள்ள பகுதி. எண்ணெய் நிறுவனத்தினர் எரிபொருள் சோதனையின்போது எனது ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரோடு எண்ணெயும் சேர்ந்து வந்தது. பிறகு, எரிவாயு சோதனை மேற்கொண்டபோது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் கருகிவிட்டது. தொடக்கத்தில் எங்களுக்கு இதுபற்றி தெரியவில்லை. அதனால் விட்டுவிட்டோம். தற்போது உண்மை புரிவதால் இதை எதிர்க்கிறோம்.

வாணக்கன்காட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்துள்ள விவசாயி ராஜேஷ்: இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக இங்கிருந்து எந்த எரிபொருளும் எடுக்கப்பட மாட்டாது என கூறிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றின் மேல்பகுதி உள்ள மூடியின் உடைந்த பகுதியில் இருந்து எண்ணெய் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. சுமார் 10 அடி ஆழமுள்ள தொட்டி நிரம்பி, அதிலிருந்து வெளியேறி விளைநிலத்தில் செல்கிறது. எந்த ஒரு இழுவிசை கொண்ட மோட்டாரும் பொருத்தப்படாமல் தானாகவே எண்ணெய் வெளியேறுவது மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

இதுகுறித்து ‘தி இந்து’வில் செய்தி வெளியான பிறகு அலுவலர்கள் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, “விரைவில் எண்ணெய் கசிந்து வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்து சென்றனர் என்றார்.

நெடுவாசல் முன்னாள் ஊராட்சித் தலைவர் கே.தெட்சிணாமூர்த்தி: மண்ணெண்ணெய் ஆய்வுக்காக என்று கூறியதால் இத்திட்டத்தை அனுமதித்தோம். ஆனால், தற்போது எரிவாயு என்பதால் இதை எதிர்த்து வருகிறோம். இதற்காக ஹைட்ரோ கார்பன் (எரிவாயு ) தடுப்பு கூட்டு இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி போராடி வருகிறோம்.

அப்போதும் சரி, இப்போதும் சரி, இத்திட்டம் தொடர்பாக மக்களுக்கு அலுவலர்கள் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் எல்லையில் வானம் பார்த்த பூமியாக இருந்த இந்தப் பகுதியை விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்து, வளமான நிலமாக மாற்றியுள்ளோம். இந்த நிலத்தை எரித்து பாலைவனமாக மாற்றவும், நிலத்தை நஞ்சாக்கவும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டி.ராஜகுமாரன்: நெடுவாசலில் அனைத்து பணிகளும் கைவிடப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அங்கு எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள் ளது.

இதன் மூலம் ஏற்கெனவே ஆய்வுப் பணி முடித்து வைக்கப்பட்டுள்ள வடகாடு, வாணக்கன்காடு, கருக்காகுறிச்சி, கோட்டைக்காடு ஆகிய இடங்களிலும் எரிபொருள் எடுக்க வாய்ப்பு உள்ளது. வடகாட்டுக்கு கடந்த வாரம் ஆய்வுக்கு வந்த ஓஎன்ஜிசி அலுவலர்கள், வடகாட்டில் எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு மின் இணைப்பு பெறுவது குறித்து வடகாடு மின்வாரிய அலுவலகத்தில் விசாரித்துச் சென்றுள்ளது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் கூறும்போது, “இத்திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. பருவநிலை மாறுபாடு அடைந்துள்ளதால் தற்போது உணவு மிகவும் அவசியமாக உள்ளது. எனவே, விவசாயத்தை அழிக்கும் எந்த திட்டத்தையும் கொண்டுவர தேவையில்லை” என்றார்.

மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி அவசியம்

இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்தை தனியாருக்கு வழங்குவதற்கான அனுமதிதான் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த திட்டத்துக்கு, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெற வேண்டும். அதன்பிறகு, அந்த திட்டத்தை தொடங்க, இசைவு ஆணை கோரி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்து, நாங்களும் நேரில் ஆய்வு செய்து, அந்த திட்டத்தை அனுமதிப்பது குறித்து முடிவெடுப்போம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்காவிட்டால், திட்டத்தை செயல்படுத்த முடியாது” என்றார்.

காவிரி ஆற்றுப் படுகையில் மீத்தேன், ஷேல் காஸ் திட்டங்களைச் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன்:

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணெய் திட்டங்களை மக்கள் அனுமதித்தனர். ஆனால் தற்போது எண்ணெய் நிறுவனங்களால் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. விவசாய நிலங்களும் பாழானது. அப்பகுதி வாழ் மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இன்று மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனர். அவர்களின் போராட்டத்தால்தான், மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முன்னதாக, தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு அரசுக்கு அளித்த அறிக்கையில், ஏன் மீத்தேன் திட்டம் கூடாது என்பதற்காக கூறியுள்ள காரணங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் பொருந்தும். அதனால் அந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது.

விஞ்ஞானிகள் கருத்து

இத்திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், இதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து பிரபல விஞ்ஞானி டாக்டர் டி.ஜெயபிரபு ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் பூமிக்கடியில் அதிகளவு மீத்தேன் இருப்பதால் அதை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பூமிக்கடியில் உள்ள மீத்தேன், ஈத்தேன், புரோபேன், ஹைட்ரஜன் உள்ளிட்ட வாயுக்கள் அதிகளவு எரியும் திறன் கொண்டவை. பல்வேறு இயற்கை பேரழிவுகளால் காடுகள் அழியும்போது, அவை மண்ணில் புதைகின்றன. அதிக வெப்பம், மேற்பரப்பில் ஏற்படும் படிமங்களின் அழுத்தம், வேதியியல் மாற்றங்கள் ஆகியவற்றால் அவை நிலக்கரியாக மாறுகின்றன. இந்த மாற்றங்களின் போது வெளியாகும் மீத்தேன் வாயு நிலக்கரியுடன் இணைந்து பூமிக்கடியில் சிக்கிக்கொள்கிறது. இதை வெளியில் எடுப்பதே மீத்தேன் வாயு உற்பத்தி எனப்படுகிறது. இதுதான் ஹைட்ரோ கார்பன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை பகுதியில் பூமிக்கடியில் அதிகளவு கூழாங்கற்கள் உள்ளன. இவற்றின் இடையில் மீத்தேன் வாயு உள்ளது. பூமியை துளைத்து மீத்தேனை உறிஞ்சி எடுக்கும்போது இந்தக் கற்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மண்ணின் தன்மை மாறும். இதனால், பூமியின் மேற்பகுதியில் உள்ள மண்ணின் தன்மையும் பாதிப்புக்குள்ளாகும். அத்துடன், பூமிக்கடியில் உள்ள நீர் ஓட்டத்தைப் பாதிக்கும். இந்த பாதிப்புகள் உடனடியாக மக்களைப் பாதிக்காது. ஆனால், எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பொதுவாக, இயற்கை எரிவாயு எடுப்பது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு ஓர் அத்தியாவசியமான தேவை. பூமிக்கடியில் இதற்காக ஆய்வுகளை மேற்கொள்ளும் போது அந்த இடத்தில் உள்ள மண்ணின் தன்மை, நீர் ஆதாரம், அந்த நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விவசாய சாகுபடி எவ்வளவு, தற்போது அந்த மண்ணில் நடைபெறும் விவசாய சாகுபடி எவ்வளவு, சாகுபடி குறைந்தால் அதற்கான காரணம் என்ன, செடி, கொடிகள் முளைப்பதற்கு தகுதி வாய்ந்த மண்ணா, பூமிக்கடியில் துளை அமைத்து இயற்கை எரிவாயுவை எடுக்கும்போது அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும், இதனால் மனிதர்களுக்கு ஏதேனும் தீங்குகள் ஏற்படுமா உள்ளிட்ட அனைத்து சாதக, பாதக அம்சங்களையும் தீவிரமாக ஆய்வு செய்து அதன் பிறகுதான் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, அப்பகுதி மக்களின் மனதில் எழும் சந்தேகங்களுக்கு உரிய தீர்வை அளித்து அவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசு அறிவியல் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்:

தனியார்மயமாக்கல் பரவிவரும் இன்றைய சூழ்நிலையில் எந்த பெரிய திட்டம் வந்தாலும் உடனே நமது நிலங்கள் போய்விடுமோ அல்லது இயற்கை வளங்கள் பாதிக்குமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்படுகிறது. அந்த அச்சம் எதிர்பார்க்கக் கூடியதுதான். இதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இது முதல் விஷயம். இரண்டாவது விஷயம் என்னவென்றால் ஏற்கெனவே பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை எடுத்தபோது பிரச்சினை எழுந்தது. குறிப்பாக, காவிரிப் படுகையில் நரிமணம் பகுதியில் பெட்ரோலிய பொருட்கள் கிடைக்கும் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அப்போதிருந்த தொழில்நுட்ப வசதியால் கிணறுகளைத் தோண்டினால் செலவிடப்பட்ட முதலீடு திரும்ப வராது என்ற காரணத்தால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில் இறங்குவதால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை அறிந்துகொள்ள, இதற்கு முன்பாக காவிரிப் படுகையில் என்னென்ன சிக்கல்கள் வந்தன என்பதை ஆய்வு செய்வது அவசியம். முழுமையாக ஆய்வு செய்யாமல் இறங்குவது புதிய சிக்கல்களை ஏற்படுத்த வழி வகுக்கும்.

பல எண்ணெய் வயல்களில் எண்ணெய் வளம் குறைந்துவிட்டதால் அவற்றை மூடிவிட்டார்கள். அவ்வாறு மூடிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் மீண்டும் சீரமைக்கப்படவில்லை என்ற ஒரு வருத்தம் உள்ளது. எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை அனுப்பும் குழாய்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. மூன்றாவதாக, எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்ததும் அந்த இடங்களில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூடி போட்டு (வால்வு) மூடப்படும். சில இடங்களில் இந்தக் குழாய் வால்வுகளில் வெடிப்பு ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரி என்னவெல்லாம் சிக்கல்கள் வந்தன என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 4 இடங்கள்

நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் கிடைக்கும் 38 இடங்கள் கடந்த 2008-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் 25 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதியான நெடுவாசல், குத்தாலம், கீழ்வேலூர், நன்னிலம் ஆகிய 4 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை எரிசக்தி கண்டறியப்பட்ட சிறுவயல்களாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதை ஹைட்ரோ கார்பன் இயக்குநர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுவரை எரிசக்தி வயல்களை மத்திய அரசின் ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா நிறுவனம் ஆகியவை கையாண்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால், அவற்றால் லாபம் ஈட்ட முடியாததால், அந்த வயல்களைத் தனியாருக்கு கொடுத்து, வருவாயில் மத்திய அரசு பங்கு கோரும் வகையில், கடந்த 2015-ல் சிறு வயல்கள் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது. அதன் அடிப்படையில் தனியாரிடம் சிறு வயல்களை ஒப்படைப்பதற்கான ஒப்புதலைத்தான் தற்போது மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்கள் குழு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அளித்துள்ளது. அடுத்து வரும் காலங்களில் மற்ற 3 இடங்களிலும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

என்ன நடக்கிறது நெடுவாசலில்?

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. ஆயிரம் அடிக்கு ஆழ்துளை கிணறு அமைத்தும் சில இடங்களில் தண்ணீர் இல்லை. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளம், ஏரிகள் வறண்டுள்ளன. இந்த மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அநேக இடங்களில் நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீரை வெளிக்கொணர்ந்து நெல், சோளம், கடலை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இத்தகைய பசுமையான பகுதிகளில் இயற்கை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) அடுத்தடுத்து எரிபொருள் சோதனை முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. அதன் தொடக்கமாக வடகாடு ஊராட்சி கல்லிக்கொல்லையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகம் உள்ளிட்ட 4 பேரிடம் இருந்து சுமார் 4 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி அதில், சுமார் 5 ஆயிரம் அடி ஆழத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதிலிருந்து எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, அந்த இடத்தை அப்படியே மூடி வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

இதேபோல, கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, நெடுவாசல் (நல்லாண்டார் கொல்லை) ஆகிய இடங்களில் விவசாயிகளிடம் இருந்து நிலங்களைக் குத்தகைக்கு வாங்கி, அதில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து கருப்பு நிறத்தில் எண்ணெய் எடுத்து உள்ளூரிலும், வெளியூருக்கு கொண்டு சென்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த எண்ணெய் அங்குள்ள தொட்டிகளிலும் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆழ்துளை கிணறுகளின் மேல்பகுதியில் சுமார் 30 அடி உயரத்துக்குமேல் தீ பற்றவைத்து எரியவைத்து எரிவாயுவின் தன்மை குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எந்தப் பணிகளை மேற்கொண்டாலும் அதைப்பற்றி உள்ளூரில் யாருக்கும் தெரியப்ப டுத்துவதில்லை. மேலும், அந்தப் பகுதிக்குள் யாரையும் அனுமதித்ததும் இல்லை. தூரத்தில் நின்றுதான் மக்கள் வேடிக்கை பார்த்தனர். அப்போதுவரை யாரும் அந்த எண்ணெய் நிறுவனங்களிடம் பெரிய அளவில் உள்ளூர் மக்கள் கேள்விகளை முன்வைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x