

தேவாலயத்துக்குள் புகுந்து பள்ளி ஆசிரியையை வெட்டிக் கொலை செய்த இளைஞர், தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண் டார். தூத்துக்குடியில் ஒருதலைக்காத லால் இந்த விபரீத சம்பவம் நடந் துள்ளது.
தூத்துக்குடி ஜார்ஜ் சாலை, இந்திரா நகரைச் சேர்ந்த நியூமென் மகள் பிரான்சினா(24). இவர், தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
தினமும் வீட்டில் இருந்து நடந்து பள்ளிக்கு வரும் பிரான்சினா, வகுப் பறைக்கு செல்வதற்கு முன்பு தேவால யத்தில் வழிபடுவது வழக்கம். அது போல் நேற்று காலை 8.30 மணியளவில் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தார்.
அப்போது தேவாலயத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அரிவாளால் சரமாரியாக பிரான்சினாவை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். பலத்த காய மடைந்த பிரான்சினா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மாநகர உதவி கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், தென்பாகம் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மறக்குடி தெருவைச் சேர்ந்த ஜோதி கோமஸ் மகன் கீகன் ஜோஸ்(26) என்பவர், பிரான்சினாவை கொலை செய்தது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகே மணல் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் கீகன் ஜோஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டனர்.
கீகன் ஜோஸ், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரான்சினாவை பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், அவரது காதலை பிரான்சினா ஏற்கவில்லை. ஓராண்டுக்கு முன் கீகன் ஜோஸின் தொந்தரவு அதிகரிக்கவே, அவர் மீது தென்பாகம் போலீஸில் பிரான்சினா குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். இதையடுத்து கீகன் ஜோஸை போலீஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்குப் பிறகும் பிரான்சினாவை, கீகன் ஜோஸ் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
8-ம் தேதி திருமணம்
பிரான்சினாவுக்கு வரும் 8-ம் தேதி கப்பல் ஊழியர் ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது. இதனால், கடந்த ஒரு வாரமாக கீகன் ஜோஸ் அதிக தொல்லை கொடுத்துள்ளார். 8-ம் தேதி திருமணம் என்பதால் நேற்றோடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ள பிரான்சினா முடிவு செய்திருந்தார். இதையறிந்த கீகன் ஜோஸ் நேற்று அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.