Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM

நாங்கள் ஸ்டாலின் பக்கம் இருக்கிறோம்: தென் மாவட்ட நிர்வாகிகள்

அழகிரிக்கு நெருக்கமாக இருந்த திமுகவின் மதுரை மாவட்டச் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட தென் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து, மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கட்சித் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று மாவட்டச் செயலாளர்கள் அவரிடம் உறுதி அளித்துள்ளனர்.

தனது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை குறித்து நியாயம் கேட்டதால், தன்னையும் கட்சியி லிருந்து நீக்கியதாக மு.க.அழகிரி கூறியிருந்தார்.

ஆனால், அழகிரி தன்னைச் சந்தித்தபோது ஸ்டாலின் குறித்து, அவதூறான வார்த்தை களையும், ஸ்டாலின் இன்னும் மூன்று, நான்கு மாதங் களில் இறந்து விடுவார் என்று கூறியதாகவும், திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். இது அபாண்டம் என்று அழகிரியும் பதில் பேட்டி கொடுத்தார்.

இந்த நிலையில், திமுகவின் தென் மண்டல மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மூர்த்தி, தளபதி, சுப.தங்கவேலன், மூக்கையா மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று அறிவாலயத்துக்கு திடீரென வரவழைக்கப்பட்டனர்.

சென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கு, இனி அழகிரிக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும் உருவ பொம்மைகளை எரிப்பதும் வேண்டாம் என உத்தர விடப்பட்டுள்ளது.

தென் மண்டல மாவட்ட நிர்வாகிகளிடம், நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள், அழகிரிக்கு ஆதரவாளர்கள் யார்.. யார்? அவர்கள் தற்போது யார் பக்கம் வரப் போகிறார்கள் என்பதாக தனித்தனியே விசாரிக்கப் பட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதற்கு, பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தலைமையின் பக்கம்தான் இருக்கிறோம். திருச்சி மாநாட்டுக்கு தென் மண்டலத்திலிருந்து அதிக அளவில் கூட்டத்தைத் திரட்டி வந்து, திமுக தலைமையின் பலத்தை நிரூபிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தனித்தனியே திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, சால்வை அணிவித்து, நாங்கள் ஸ்டாலின் பக்கம் இருக்கிறோம் என பதிவு செய்தனர். அறிவாலயம் வளாகம் முழுவதும் பல்வேறு மாவட்ட திமுக நிர்வாகிகள் திரண்டு நின்று, கருணாநிதியையும், ஸ்டாலினையும் வாழ்த்திக் கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x