Published : 27 Sep 2016 10:09 AM
Last Updated : 27 Sep 2016 10:09 AM

நீலாங்கரை அருகே தனியார் கால் டாக்ஸியில் சென்ற பெண் டாக்டரை கடத்த முயற்சி: ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது

சென்னையில் இருந்து கால் டாக்ஸியில் சென்ற பெண் டாக்டரை இருவர் உதவியுடன் கடத்த முயன்ற கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கு வருவதற்காக தனியார் கால் டாக்ஸியை அழைத்து அதில் பயணித்துள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலை வந்தவுடன் ஈஞ்சம்பாக்கம் பகுதிக்குச் செல்லாமல் புதுச்சேரியை நோக்கி கார் சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் கார் நிற்காமல் சென்று வழியில் இருவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. தப்பிக்க முயன்றும் முடியாத நிலையில் இருந்த பெண் டாக்டரிடம் அந்த நபர்கள் அத்துமீற முயன்றுள்ளனர்.

இதையடுத்து அந்த கார் செல்லும் பகுதியில் உள்ள தனது நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரும் தனது காரை எடுத்துக் கொண்டு நீலாங்கரை நோக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு வந்த கால்டாக்ஸியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது நடுவழியில் ஏறிய அந்த இருவரும் தப்பியோடிவிட்டனர்.

3 பேர் கைது

கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். காரில் இருந்து தப்பியோடிய சரவணன், முத்துபாண்டி ஆகியோரை வெங்கடேசன் அளித்த தகவலின் அடிப்படையில் நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் மீதும் நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

பெண்கள் கவனத்துக்கு..

வாடகை காரில் செல்லும் பெண்கள் தாங்கள் செல்லும் வண்டியின் எண், மற்றும் ஓட்டுநரின் செல்போன் எண் ஆகியவற்றை வீட்டில் உள்ளவருக்கு தெரிவிக்க வேண்டும். தாங்கள் செல்லும் பகுதியில் உள்ள காவல் நிலைய ஆய்வாளரின் செல்போன் எண் போன்றவற்றையும் கையில் வைத்திருக்க வேண்டும். கார் சேர வேண்டிய இடம் வரை அமைதியாக இருக்காமல் தாங்கள் எந்த பகுதியில் செல்கிறோம் என்பதை வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு அவ்வப்போது தெரிவிக்கலாம். இதன் மூலம் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x