பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: அஞ்சலகங்கள் வெறிச்சோடின

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: அஞ்சலகங்கள் வெறிச்சோடின
Updated on
2 min read

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை சங்கங்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், அஞ்சல் சேவைப் பணிகள் பெரிதும் பாதிக் கப்பட்டன.

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, தபால் துறை, வருமான வரித்துறை, சுங்க வரித்துறை, வருங்கால வைப்பு நிதி, தூர்தர்ஷன், மத்திய தொல் லியல் துறை உள்ளிட்ட சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்படி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் 90 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வராததால் அஞ்சல் சேவைப் பணிகள் நேற்று பெரிதும் பாதிக்கப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பி-3 பிரிவு வேலூர் கோட்ட தலைவர் கதிர் அகமது, தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் பி-4 பிரிவு வேலூர் கோட்டத் தலைவர் மகேந்திரவர்மன் ஆகியோர் தலைமை தாங்கினர். பி-3 பிரிவு சங்கத்தின் கோட்டச் செயலாளர் வீரன், மத்திய ஊழியர் மகா சம்மேளத்தின் வேலூர் மாவட்டப் பொதுச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் துறை ஊழியர்கள்.

இந்தப் போராட்டம் குறித்து பெருமாள் கூறும்போது, ‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் 3 லட்சம் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு குறித்து கமலேஷ் சந்திரா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அமல் படுத்தவேண்டும்.

வீட்டு வாடகைப்படியை குறைத்ததைத் திரும்பப் பெற வேண்டும். நிறுத்தப்பட்ட விழாக்கால முன்பணத்தை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட சைக்கிள் பராமரிப்புக் கட்டணத்தை மீண்டும் கொடுக்க வேண்டும். 7-வது ஊதியக் குழுவில் நிறுத்தப்பட்ட 57 வகையான படிகளை மீண்டும் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது’’ என்றார்.

இதே கோரிக்கையை வலி யுறுத்தி காட்பாடி ரயில் அஞ்சல் சேவை மையம், காட்பாடி காந்தி நகர் அஞ்சல் நிலையம், ராணிப் பேட்டை தலைமை அஞ்சலகம், அணைக்கட்டு உள்ளிட்ட இடங் களில் நேற்று அஞ்சல் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in