அமெரிக்க கப்பல் பொறியாளர் திடீர் தற்கொலை மிரட்டல்

அமெரிக்க கப்பல் பொறியாளர் திடீர் தற்கொலை மிரட்டல்
Updated on
2 min read

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பலின் பொறியாளர் திங்கள் கிழமை தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த, அமெரிக்காவின் அட்வன் போர்ட் என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான, சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை, இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த 11-ம் தேதி சிறைபிடித்து, தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர்.

இதுதொடர்பாக கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி கப்பலில் இருந்த, 35 பேரில் 33 பேரை 18-ம் தேதி கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கப்பல் பராமரிப்புக்காக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கேப்டன் டுட்னிக் வாலன்டைன், கப்பலின் பொறியாளரான அதே நாட்டை சேர்ந்த சிடரென்கோ வாலேரி ஆகிய இருவரும், கப்பலிலேயே இருந்தனர். இந்நிலையில், 19-ம் தேதி பொறியாளர் வாலேரி, கப்பலில் தற்கொலைக்கு முயன்றார். உடனே, இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்கொலை மிரட்டல்

இந்நிலையில், திங்கள்கிழமை காலை, பொறியாளர் சிடரென்கோ வாலேரி, தனது சட்டையைக் கிழித்துக் கொண்டு, அதில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி சக கைதிகள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறை கண்காணிப்பாளர் கனக ராஜ் அங்கு சென்று, பொறி யாளர் வாலேரியையும், அவருடன் அமெரிக்க கப்பலில் இருந்து பிடிபட்ட மற்றவர்களையும் தனியாக அழைத்துப் பேசினார். தொடர்ந்து வாலேரிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது.

அமெரிக்க கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 35 பேரும் சிறைக்குள் தனி பிளாக்கில் பின்னர் அடைக்கப்பட்டனர். அவர்களையும், பொறியாளர் வாலேரியையும் கண்காணிக்க கூடுதல் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பாளர் மறுப்பு

சிறை கண்காணிப்பாளர் கனகராஜ் கூறுகையில், ‘தற்கொலை செய்யப்போவதாக பொறியாளர் வாலேரி தொடர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறார். இதனால் அவரையும், அவருடன் கைது செய்யப்பட்டவர்களையும் அழைத்து கவுன்சலிங் அளிக்கப்பட்டது. அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை’ என்றார் அவர்.

தூதரக அதிகாரிகள் சந்திப்பு

தூத்துக்குடி அருகே பிடிபட்ட அமெரிக்க கப்பலில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்டோனியா மற்றும் இங்கிலாந்து நாட்டவரை, அந்நாட்டு தூதரக அதிகாரிகள் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.

கைது செய்யப்பட்டவர்களில் எஸ்டோனியா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை சந்தித்துப் பேசுவதற்காக, புதுடில்லியிலுள்ள எஸ்டோனியா தூதரக அதிகாரி மார்கஸ் சார்க்லட், இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் ரொனா ராயில், பெட்ரூலா ஜேம்ஸ் ஆகியோர் பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் வந்தனர். சிறைக்குள் சென்ற அவர்கள் பகல் 12.30 மணிக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்க கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட விவகாரம், அவர்கள் மீதான வழக்கு விவரங்கள் குறித்து, அதிகாரிகள் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. சிறைக்குள் நடந்த சந்திப்பு குறித்து கருத்து எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in