

ஜெயலலிதா விடுதலையாகிட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகளில் தமிழக அமைச்சர்கள் இருவர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், பூண்டி, திருவாலங்காடு, கடம்பத் தூர், திருவள்ளூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நேற்று சிறப்பு யாகங்கள், அபிஷேகம் உள்ளிட்டவைகளை அதிமுகவினர் நடத்தினர். காலை முதல், மாலை வரை நடந்த இந்த நிகழ்வுகளில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் பங்கேற்றனர்.
அதுமட்டுமல்லாமல், நேற்று மதியம் முதல், மாலை வரை, பூண்டி அருகே உள்ள நெய்வேலி அக்னீஸ்வரர் கோயில், திருவாலங்காடு வடாரண் யேஸ்வரர் கோயில், கடம்பத்தூர் அருகே உள்ள திருபுராந்தக சுவாமி கோயில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளிலும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் பங்கேற்றனர்.