

மக்களை ஏமாற்றும் கட்சிகளை தடை செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றும் வகையில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்ததற்காக அதிமுகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை செயல்படுத்துவதற்கான வழிகளை விளக்கிக் கூறத் தவறிய திமுகவையும் ஆணையம் கண்டித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. பொங்கலுக்காக அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.500 மதிப்புள்ள பரிசுக் கூப்பன், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்பேசிகள், ஏழை மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு அம்மா வங்கி அட்டை, பெண்களுக்கு இரு சக்கர ஊர்தி வாங்க 50% மானியம் என ஏராளமான திட்டங்களை மக்களை ஏமாற்றும் நோக்குடன் அதிமுக அறிவித்திருந்தது. திமுக சார்பிலும் இதேபோல் சாத்தியமற்ற வாக்குறுதிகள் அதிகம் அளிக்கப்பட்டிருந்தன.
அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை என்று அப்போதே பாமக குற்றஞ்சாட்டியிருந்தது. தமிழக அரசு ஏற்கெனவே கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமானால் தமிழக அரசின் கடன்சுமை ரூ.5.15 லட்சம் கோடியாக அதிகரித்துவிடும் என்று குற்றஞ்சாட்டியிருந்தேன்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனுவையும் அனுப்பியிருந்தேன். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயமும் தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனுக்களை அனுப்பியிருந்தார். அவற்றினடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியிருந்தது. அதற்கு அந்தக் கட்சிகள் அளித்த விளக்கத்தை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், இரு கட்சிகளும் இனி வரும் காலங்களிலாவது தேர்தல் அறிக்கை குறித்த விதிகளை மதித்து நடக்கும்படி எச்சரித்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குதிரைகள் அனைத்தும் தப்பி ஓடிய பின்னர் லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பானது ஆகும். பேரவை தேர்தலையொட்டி பாமக 144 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்தும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டிருந்தது. மாறாக அதிமுகவும், திமுகவும் சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராயாமல் வெற்று வாக்குறுதிகளை வாரி இறைத்திருந்தன.
குறிப்பாக, தமிழகத்தில் 18 வயதைக் கடந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 2.5 கோடி. இரு சக்கர ஊர்தி வாங்குவதற்கான மானியமாக ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ.30 ஆயிரம் வழங்குவதாக வைத்துக் கொண்டால் இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும். இது சாத்தியமே அல்ல. ஆனாலும், மக்கள் இதை உண்மையென நம்பி அதிமுகவுக்கு வாக்களித்தனர். இதேபோல் தான் திமுகவும் சாத்தியமில்லாத பல வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கியது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முயற்சி செய்யவில்லை.
அதிமுகவும், திமுகவும் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை என்பதற்கு முதல்நோக்கு ஆதாரங்கள் இருந்த நிலையில், அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஆணையம் தடை செய்திருக்க வேண்டும். இரு கட்சிகளின் மோசடியான தேர்தல் அறிக்கைகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், அது நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு உதவாது என்பதாலும் தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, மோசடி தேர்தல் அறிக்கைகளின் தாக்கம் குறைந்த பிறகு, புதிய தேர்தல் அறிக்கை வெளியிடச் செய்து தேர்தலை நடத்தியிருந்தால் அது நேர்மையான, சுதந்திரமான தேர்தலாக இருந்திருக்கும்.
ஒருபுறம் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதை தடுக்கத் தவறும் தேர்தல் ஆணையம் இத்தகைய மோசடி தேர்தல் அறிக்கைகளையும் தடுப்பதில்லை. இதைப்பயன்படுத்திக் கொண்டு பண பலமும், படை பலமும் உள்ள கட்சிகள் ஏமாற்று வாக்குறுதிகளையும், ஓட்டுக்கு பணத்தையும் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறுகின்றன; இந்தத் தேர்தல்களில் ஜனநாயகம் படுதோல்வியடைகிறது. அனைத்தும் முடிந்த பிறகு அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஆணையம் கண்டனம் தெரிவிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. இது தேர்தலில் மோசடி செய்யும் கட்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகவே அமையும்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது, தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறிவிட்டார். இத்தகைய சூழலில் இதுபோன்ற மோசடிகளை தடுக்க தேர்தல் சீர்திருத்தங்களை செய்து, ஆணையத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவது தான் தீர்வு ஆகும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகள், மோசடியான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றும் கட்சிகளை தடை செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசியுள்ளேன். அடுத்த தேர்தலுக்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதை பாமக உறுதி செய்யும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.