

வடமாநிலத்தை சேர்ந்த குழந்தை ஸ்வாதி (1 வயது 9 மாதம்). குழந்தையின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பிறவிலேயே இதய கோளாறுடன் பிறந்த குழந்தை மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தையின் பிரச்சினை சரியாகவில்லை.
இதையடுத்து, பெற்றோர் குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, குழந்தையை சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும் என்பது தெரியவந்தது. இந்த விவரத்தை பெற்றொரிடமும் டாக்டர்கள் தெரிவித்தனர். பொருத்தமான மாற்று இதயத்துக்காக காத்திருந்த குழந்தைக்கு கடந்த 9 மாதங்களாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
கொச்சி சிறுவன் மூளைச்சாவு
இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 10 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கடந்த 17-ம் தேதி சிறுவன் மூளைச்சாவு அடைந்தான். மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்ய முன்வந்தனர். சிறுவனின் இதயம் தவிர மற்ற உறுப்புகளை கேரள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு பொருத்த திட்டமிட்டனர். இதயத்தை மட்டும் சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் மாற்று இதயத்துக்காக சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
குழந்தைக்கு இதயம் பொருத்தம்
இதையடுத்து, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் கொச்சிக்கு சென்றனர். சிறுவனின் இதயத்தை பெற்றுக் கொண்டு டாக்டர்கள் குழு கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் இதயத்துடன் டாக்டர்கள் குழு அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த இதய சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஸ்வாதிக்கு வெற்றிகரமாக பொருத்தினர். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தையை டாக்டர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்தியாவில் முதல் முறை
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண் குழந்தைக்கு (2 வயது 9 மாதம்) இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 2 வயது ஆண் குழந்தையின் இதயம், ரஷ்ய குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
இதுவே இந்தியாவிலேயே முதல் முறையாக மிகக்குறைந்த வயதுள்ள குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகும். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டு 1 வயது 9 மாதமே ஆன பெண் குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனையை சென்னை டாக்டர்கள் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.