

திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் தமிழ் பழங்குடியின மக்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு பழங்குடியின கூட்டமைப்பின் செயலாளர் என்.மோகன் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய பழங்குடியின கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் எப். கார்சிங்கி, சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பழங்குடியின மக்கள் கொடுக்கும் மனுக்களை சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு துறைகளுக்கு கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும் அமைப்பாக மட்டுமே தேசிய பழங்குடி ஆணையம் உள்ளது. பழங்குடியின மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதற்கு இந்த ஆணையத்துக்கு முழு அதிகாரம் இல்லை. பழங்குடியின மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆணையத்துக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு பழங்குடியின கூட்டமைப்பின் மாநில செயலாளர் என்.மோகன் கூறியதாவது:
தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக சுமார் ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், இந்தத் தொகை பழங்குடியின மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுவதில்லை. மாறாக அரசின் இலவச திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது.
ஜவ்வாது மலை, ஏற்காடு, பச்சைமலை, ஏலகிரி, கொல்லி மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், கொத்தடிமை முறையில் திருப்பதிக்கு மரம் அறுக்கும் வேலைக்காக அழைத்து செல்லப்படுகின்றனர். அவர் களுக்கு செம்மரக் கட்டைகளை அறுக்கும் பணி வழங்கப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது, முதலாளிகள் தப்பிவிடுவதால் அப்பாவி பழங்குடியின மக்கள் சிக்கிக் கொள்கின்றனர்.
அவர்கள் மீது செம்மரக் கடத்தல் மட்டும் இல்லாமல் கொலை வழக்குகளும் பொய்யாக போடப்படுகிறது. திருப்பதி சிறையில் மட்டும் 2 ஆயிரம் தமிழக பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு மோகன் கூறினார்.