

சிறிய பஸ்களில் இருப்பது அதிமுக தேர்தல் சின்னம் அல்ல என்றும், அவை பசுமையை வலியுறுத்தும் 4 இலைகள் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிறிய பஸ்களில் இடம்பெற்றுள்ள இரட்டை இலை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று கோரி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தமிழக தலைமைச் செயலாளர், போக்குவரத்து முதன்மை செயலாளர், போக்குவரத்து கழகங்களில் நிர்வாக இயக்குனர்கள் ஆகியோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், போக்குவரத்து முதன்மை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலைக்கும், அதிமுகவின் தேர்தல் சின்னம் இரட்டை இலைக்கும் வித்தியாசம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள படத்தில் 4 இலைகள் இருப்பதாகவும், பசுமையை வலியுறுத்தவே படம் வரையப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியல் காரணத்திற்காகவே திமுக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த அக்டோபர் 23-ம் தேதி முதல் சிறிய பஸ்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இயக்கப்படும் 50 பஸ்களின் பக்கவாட்டுகளில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் இடம்பெற்றுள்ளது.
இன்னும் சில வாரங்களில் 610 சிறிய பஸ்களைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இயக்க உள்ளனர். அந்தப் பஸ்களில் எல்லாம் இரட்டை இலை சின்னத்தை இடம்பெறச் செய்து, தமிழக மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
அரசுப்பணத்தில் இவ்வாறு அ.தி.மு.க.வின் சின்னத்தைப் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது. இதனால் பிற அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, சிறிய பஸ்களில் இரட்டைஇலை சின்னத்தை வரைய நீதிமன்றம் தடை விதிப்பதோடு, ஏற்கெனவே இடம்பெற்றுள்ள இரட்டை இலை சின்னத்தை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.
மேலும், அரசு பஸ்களில் கட்சியின் சின்னத்தை இடம்பெறச் செய்தமைக்காக அ.தி.மு.க.வுக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் ஸ்டாலின் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.