

ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்து இருந்தும் இம்முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஈரோடு மாநகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, பொதுப்பிரிவினருக்கு மேயர் பதவி ஒதுக்கப்பட்டு இருந்தது. அப்போது அதிமுக மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்த கே.வி.ராமலிங்கத்தின் பரிந்துரையின் பேரில், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மல்லிகா பரமசிவம் வெற்றி பெற்று மேயரானார்.
5 ஆண்டுகளில் அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி ஆகியவற்றை கே.வி.ராமலிங்கம் இழந்தார். அதன் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் கடைசி நேரத்தில் வேட்பாளராகி, வெற்றி பெற்றதுடன் தற்போது மாநகர் மாவட்ட செயலாளர் பதவியையும் வகித்து வருகிறார்.
பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு
அடுத்த மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கே.வி.ராமலிங்கத்தின் ஆதரவாள ராக கருதப்படும் மல்லிகா பரமசிவத்துக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஈரோடு மாநகராட்சியில் 23-வது வார்டில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்தார். ஆனால், நேற்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் மேயர் மல்லிகா பரமசிவத்தின் பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘கட்சித்தலைமைக்கு மாவட்ட செயலாளர் அனுப்பிய பரிந்துரை பட்டியலில் மல்லிகா பரமசிவம் பெயர் இடம்பெறவில்லை. இதற் கான காரணம் வெளிப்படையாக தெரியவில்லை.
பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு, பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று மிரட்டல் விடுத்தது என கடந்த 5 ஆண்டுகளில் மேயரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, 50-வது வட்ட அதிமுக அவைத்தலைவராக இருந்த மேயர் மல்லிகா பரமசிவத்தின் தந்தை ஜெகநாதன், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதுவும் அவருக்கு எதிராக அமைந்துவிட்டது. இருப்பினும் கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் பதவியில் மல்லிகா பரமசிவம் தொடர்கிறார்’ என்றனர்.