

திருப்பூரில் விரைவில் பொது தொழிற்சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று, மத்திய சிறு மற்றும் குறு தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா உறுதியளித்துள்ளார்.
பல்வேறு தொழில்துறை நிகழ்வு களில் பங்கேற்க, நேற்று திருப்பூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறு மற்றும் குறு தொழில்களுக்கான மையமாக திருப்பூர் மாநகரம் விளங்குகிறது. நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வர்த்தகம் நடைபெற்றது. அப்போது, ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த தொழில்துறையினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு, மத்திய அரசு உதவும்.
சிறு மற்றும் குறு தொழில் களுக்காக செயல்படும் அமைப்பு ‘லகு உத்யோக் பாரதி’. திருப்பூரில் தொழில்துறையின் வளர்ச்சிக்காக தொழிலாளர்களும், தொழில் முனைவோர்களும் இணைந்து பணிபுரிகிறார்கள். இதனால், இங்கு தொழில்வளம் மேலோங்கியுள்ளது.
2011-ம் ஆண்டு, நலிவடைந்த திருப்பூரை தொழில்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். தலா ரூ.15 கோடியில் ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் டிசைனர் ஸ்டுடியோ உள்ளிட்ட பிரிவுகளுக் கான பொது தொழிற்சேவை மையங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
தொழிலாளர்களுக்கான பன்முகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
பின்னலாடை, சாயம் ஏற்றுதல் உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளுக்கும், எண்ணெய், அரிசி, பாத்திரம், சிலை, விசைத்தறி மற்றும் புகையிலை உள்ளிட்ட பாரம்பரியத் தொழில்களுக்கும் தொழிற்சேவை மையங்கள் தேவைப்படுகிறது என தொழில் துறையினர் கோரிக்கை வைத்தனர். முன்னதாக, திருப்பூரில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையம், நிப்ட்-டீ கல்லூரி, தொழில் நிறுவனங்கள், பெண்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்களை அமைச்சர் பார்வையிட்டார்.