Published : 05 Apr 2017 11:06 AM
Last Updated : 05 Apr 2017 11:06 AM

ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு 78 ஆண்டுகளுக்கு பின் விநோத காணிக்கை: ஒரு ஜோடி காலணிகளை தலையில் சுமந்துவந்த பக்தர்கள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள பெருமாளுக்கு, 78 ஆண்டுகளுக்குப் பிறகு காலணியை பக்தர்கள் நேற்று காணிக்கையாகச் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை அடுத்த நந்தக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோலால் செய்யப்பட்ட சுமார் ஒன்றரை அடி நீளம், முக்கால் அடி அகலம் கொண்ட ஒரு ஜோடி காலணிகளை எடுத்து வந்து ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்தினர்.

இதுகுறித்து அந்த கிராமத்திலிருந்து வந்த பக்தர் சுப்பிரமணி கூறியது:

எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருமே ஸ்ரீரங்கம் பெருமாளின் பக்தர்கள். எங்களின் குல வழக்கப்படி பெருமாள் கனவில் வந்து தெரிவித்ததன்பேரில் ஒரு ஜோடி காலணியை செய்து, அதை இங்கு கொண்டு வந்து காணிக்கையாக செலுத்துவது வழக்கம். 78 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று ஒரு ஜோடி காலணியை எங்களது முன்னோர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

எங்கள் ஊரில் உள்ள பெருமாள் பக்தர்களில் யாரேனும் ஒருவரின் கனவில் பெருமாள் வந்து சொன்ன பிறகே நாங்கள் காலணியை செய்யத் தொடங்குவோம். எந்த தோலில் அந்த காலணி செய்யப்பட வேண்டும், தோலை எங்கு வாங்க வேண்டும் மற்றும் காலணியின் அளவு ஆகியவை குறித்தும் பெருமாள் கனவில் தெரிவிப்பார்.

இதைத்தொடர்ந்து, கிராமத்தில் உள்ள 3 பேர் 7 நாட்கள் விரதமிருந்து இந்த காலணிகளை தயார் செய்து, அதை தலையில் வைத்து சுமந்தபடி நந்தக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்வோம். கிராம மக்கள் அளிக்கும் காணிக்கையைப் பெற்றுக்கொண்டு கிராம மக்களுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து பெருமாளுக்கு அந்த காலணிகளை காணிக்கையாக வழங்குவோம். அதன்படி 78 ஆண்டுகள் கழித்து தற்போது இங்கு காணிக்கை செலுத்த வந்துள்ளோம் என்றார்.

இதற்கென நந்தக்கோட்டை கிராம மக்கள் 100-க்கும் மேற் பட்டோர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத் துக்கு வந்தனர். அங்கிலிருந்து பெருமாளுக் குக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட காலணிகளைத் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயில் வளாகத்தில் காலணிகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி, கொட்டாரத்தில் உள்ள தூணில் அதை கட்டிவைத்தனர்.

முன்னதாக, இந்த பக்தர்களை கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பொ.ஜெயராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x