Published : 23 Nov 2013 03:03 PM
Last Updated : 23 Nov 2013 03:03 PM

தமிழகத்தில் மின்வெட்டைக் கட்டுப்படுத்த ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் மின்வெட்டை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், மின்வெட்டை கட்டுப்படுத்த முடியாததன் மூலம் அனைத்து துறைகளையும் முடங்கச் செய்து தமிழகத்தை பின்னோக்கி அழைத்துச் செல்கிறார் என்பது தான் உண்மை.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மின்வெட்டு மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மின்னுற்பத்தி பிரிவுகளில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக உற்பத்தி முடங்கி விட்டதால் தமிழகத்தின் பெரும் பகுதி இருளில் மூழ்கியுள்ளது.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப் படுகிறது. எப்போது மின்சாரம் வரும், எப்போது மின்சாரம் போகும் என்பதே தெரியாததால் மக்கள் தங்களின் அன்றாட பணிகளைக் கூட திட்டமிட்டு முடிக்க இயலாத நிலை காணப்படுகிறது. மோசமான மின்வெட்டால் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தான் செயல்படும்.

ஆனால் 12 மணி நேர பகல் வேளையில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தி அடியோடு முடங்கி விட்டது. இவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழந்து வாடுகின்றனர். இரவு நேரங்களிலும் மின்வெட்டு நீடிப்பதால் குழந்தைகள் உறங்க முடியாமல் தவிக்கின்றன; கொசுத்தொல்லை அதிகரித்து டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களும் வேகமாக பரவி வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் மின்வெட்டால் முடங்கிக் கிடக்கிறது.

தமிழ்நாட்டில் மின்வெட்டைப் போக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என்று கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்தே ஆட்சியாளர்களை நான் வலியுறுத்தி வருகிறேன். கடந்த 2011 ஆம் ஆண்டு இப்போதைய அரசு பதவியேற்ற பின்னர் மின்வெட்டை சரி செய்யக் கோரி பத்துக்கும் மேற்பட்ட முறை வலியுறுத்தியிருக்கிறேன். 3 முறை பா.ம.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உறங்கியதால் தமிழகம் இருட்டறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களில் மின்வெட்டு போக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதன்பின் பலமுறை மூன்று மாதங்கள் கடந்து போனதும், முதலமைச்சரின் வாக்குறுதி காற்றில் பறந்து போனதும் தான் மிச்சமே தவிர மின்வெட்டு போகவில்லை.

கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் மின்வெட்டு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் மின்வெட்டு போக்கப்பட்டு, 99% மின்மிகை மாநிலமாகி விட்டதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் தமிழகம் 100% மின்மிகை மாநிலமாகிவிடும் என்றும் கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது.

வழக்கமாக கோடைக் காலத்தில் தான் ஓரளவு மின்வெட்டு ஏற்படும். ஆனால், தற்போது மழைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது வரலாறு காணாத ஒன்றாகும். மின்தேவை குறைவாகவும், மின்னுற்பத்தி அதிகமாகவும் இருக்கக்கூடிய இந்த காலத்திலேயே மின்வெட்டைக் கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியவில்லை என்றால், வேறு எந்த காலத்திலும் மின்வெட்டை சரி செய்ய முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள 7 மின்னுற்பத்தி நிலையங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மின்னுற்பத்திப் பிரிவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிவிட்டதால் தான் மின்வெட்டு அதிகரித்திருக்கிறது. மின்னுற்பத்தி நிலையங்களை பராமரிப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதே இதற்குக் காரணமாகும்.

தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல்மின் கழகமும் இணைந்து அமைத்துள்ள வல்லூர் மின் நிலையத்தில் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டதற்கு நிலக்கரி இல்லாதது காரணம் என்று கூறப்படுகிறது. மின்னுற்பத்திக்குத் தேவையான நிலக்கரியைக் கூட உறுதி செய்ய தமிழக அரசால் முடியவில்லை என்பதிலிருந்தே மின்வெட்டை சரி செய்வதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

வாய்ஜாலம் காட்டுவதை விடுத்து மின்வெட்டைப் போக்க உறுதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x