கிருஷ்ணகிரி தனியார் நிறுவனத்தில் 52 பணியிடத்துக்கு 2,000 பேர் திரண்டதால் பரபரப்பு!

போச்சம்பள்ளி அருகே தனியார்  காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

போச்சம்பள்ளி அருகே தனியார் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

Updated on
1 min read

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே தனியார் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போச்சம்பள்ளி சிப்காட் தொழிற் பூங்கா 1379.76 ஏக்கர் பரப்பளவில் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இத்தொழிற் பூங்காவில் 150 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 45 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தனியார் காலணி தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் 52 காலிப் பணியிடத்துக்கு ஆட் சேர்ப்பு முகாம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையறிந்த ஆண்கள், பெண்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சுய விவரத்துடன் நேற்று நிறுவனம் முன்பு திரண்டனர். மேலும், நிறுவனத்தைச் சுற்றி உள்ள 8 கிலோ மீட்டரில் உள்ளவர்களுக்கு தற்போது வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், நேற்று வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் வந்திருந்தனர். இதன் காரணமாக போச்சம்பள்ளி சிப்காட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு போச்சம்பள்ளி வட்டாட்சியர் அருள், பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீஸார், ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்புகளை வெளியிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். 52 பணியிடங்களுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in