

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தி, அதன் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியது.
இந்நிலையில், சிலர் போலியான நில ஆவணங்களையும், பட்டாக்களையும் வழங்கி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி வரை முறைகேடாக பெற்றதாக புகார் எழுந்தது.
முக்கியமாக பீமன்தாங்கல் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை தங்களுக்குச் சொந்தமானது என சிலர் பட்டா பெற்று, அதை வழங்கி பல கோடி ரூபாய் இழப்பீடு பெற்றனர்.
அதேபோல், வல்லம், வடகால் கிராமங்களில் சிப்காட் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 2.24 லட்சம் சதுரஅடி இடத்தையும் (ஓஎஸ்ஆர்) மோசடி செய்து ஒப்படைத்து, ரூ.21 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இதற்கு சில அரசு அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக, அரசு உயர் அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீஸார் விசாரணை செய்தனர். இந்த முறைகேடுகளில் அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்தது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கில் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 15 இடங்களில் கடந்த 19-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ.1.56 கோடி ரொக்கம், ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்த ரூ.8.4 கோடியை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
இதற்கிடையே, வழக்கில், சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஆஷிஷ் ஜெயினிடம் (46) நேற்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். சென்னையை சேர்ந்த மேலும் சில தொழிலதிபர்களிடம் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.