

சென்னை: தென்காசி, கரூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமைச் செயலர் எம்.சாய்குமார் நேற்று இரவு வெளியிட்ட உத்தரவு:
சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (சிஎம்டிஏ) தலைமைச் செயல் அலுவலர் எஸ்.பி.கார்த்திகா மாற்றப்பட்டு, சமூக நலத் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்படுகிறார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன் மாற்றப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.
தமிழக ஆளுநரின் துணைச் செயலர் எஸ்.பிரசன்னா ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டு கரூர் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்படுகிறார். இவர்கள் உட்பட மொத்தம் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.