

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பருவமழை சரியான நேரத்தில் பெய்யாதாதாலும், காவிரி நீர் வராதாதாலும் கடந்த சில மாதங்களாக இப்பகுதி தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.
இடையில் மழை பெய்யும் என்று நம்பி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். பயிர் முளைத்து வரும் போது தண்ணீர் இல்லாதால் பயிர்கள் கருகின. கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் உச்சக்கட்ட வேதனையில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் வசுதா மிஸ்ரா தலைமையிலான மத்தியக்குழுவினர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் கொடியாளத்திலும், காட்டுமன்னார் கோவில் வட்டம் பரிவிளாகத்திலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு சென்றனர்.
மத்திய குழுவின் இந்த ஆய்வு குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியது:
டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன்:
வறட்சியை பார்வையிட்ட மத்தியக் குழு விவசாயிகளின் பிரச்சினை களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும். முழுமையான நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகள் நலம் பெறும் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும். நீர் ஆதாரங்களை காக்கும் வகையில் தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
ராதாவாய்க்கால் பாசனவிவசாய சங்க தலைவர் ரெங்கநாயகி:
மத்தியக்குழு பார்வையிட்டதோடு முடித்துக் கொள்ளமால் மத்திய அரசிடம் தமிழக விவசாயிகளின் உண்மை நிலையை எடுத்து கூறி விவசாயிகளின் கஷ்டம் நீங்கும் அளவிற்கு நிதியை பெற்று தர வேண்டும். இக்குழு விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாதவன்:
தமிழக அரசு கேட்கும் நிதியை இந்த குழுவினர் மத்திய அரசிடம் கேட்டு பெற்றுத்தரவேண்டும். மேலும் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றை தூர் வாரிட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கிட இந்தக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநிலத் துணைத்தலைவர் விநாயக மூர்த்தி:
நெல்லுக்கு மட்டும் நிவாரணம் வழங்குவதோடு விடாமல் உளுந்து பயறுக்கும் விவசாயிகளுக்கு நிவா ரணம் வழங்க வேண்டும். சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஆறுகளில் தடுப் பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டிய மாநில செயலாளர் ரவீந்திரன்:
இக்குழு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு குழு ஆகியவற்றை அமைக்க பரிந்துரை செய்ய வேண்டும். தேசிய இயற்கை பேரிடர் நிவாரண நிதியகத்தில் இருந்து கூடுதல் நிதியை தமிழகத்துக்கு இந்த நேரத்தில் பெற்று தர வேண்டும்.
கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன்:
இக்குழுவினர் தமிழக அரசு கேட்கும் நிதியை பெற்று தந்து போது மான அளவு நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமல் படுத்தவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பரிவளகத்தை சேர்ந்த விவசாயி துரை கூறுகையில், '' கடும் வறட்சியில் சிக்கியிருக்கிறோம். ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய குறைத்த பட்சம் ரூ. 15 ஆயிரம் வேண்டும். மத்தியக்குழு இதை கணக்கில் கொண்டு மத்திய அரசிடம் எடுத்துக்கூறி உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தார்.
''பயிர்கள் கருகியதை கூட மத்திய குழுவினரிடம் கூற இயலவில்லை. வந்தார்கள்; அவசரமாக சென்று விட்டார்கள். விவசாயிகளுக்கு போதுமான நிவாரணத் தொகையை மத்தியக்குழு பெற்றுதரவேண்டும். அதை செய்வார்கள் என்ற நம்பிக் கையில் காத்திருக்கிறோம்'' என்று விவசாயி குணசேகரன் தெரிவித்தார்.