Last Updated : 05 Oct, 2014 02:16 PM

 

Published : 05 Oct 2014 02:16 PM
Last Updated : 05 Oct 2014 02:16 PM

அழகுப் பதுமைகளா பெண்கள்?

ஒரு பெண் தன் திறமையால் காவல்துறை அதிகாரியாகப் பதவியேற்றாலும் அவளுடைய அழகை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பார்க்கும் மனப்பான்மைதான் அதிகமாக இருக்கிறது. அதற்குச் சமீபத்திய உதாரணம் கேரளாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மெரின் ஜோசப்புக்கு நேர்ந்த அனுபவம்.

2012-ம் ஆண்டு தன் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மெரின், தான் பயிற்சி பெற்ற பிரிவின் இளம் ஐ.பி.எஸ். பயிற்சியாளர். தற்போது பயிற்சி அதிகாரியாக இருக்கும் மெரின் ஜோசப், வருகிற ஜனவரியில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பதவியேற்க இருக்கிறார். இவருக்குச் சிறு வயதில் இருந்தே ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் கனவு.

“ஒரு பெண், மற்ற பெண்களுக்குத் தூண்டுதலாக இருக்கும்போது அந்தப் பெண்களைப் பார்த்து இன்னும் பலர் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறலாம். நம் சமூக அமைப்பைக் குறை சொல்வதைவிட இதில் இருந்துகொண்டு எப்படியெல்லாம் சாதிக்கலாம் என்று யோசிக்க வேண்டும்” என்று சொல்லும் மெரின் ஜோசப்பின் பெயரில் ஏகப்பட்ட போலி வலைதளக் கணக்குகள் உலவுகின்றன. அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மெரின், தான் இன்னும் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பதவியேற்கவில்லை என்றும் தன் பெயரில் இயங்கும் போலிக் கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அநாகரிக அத்துமீறல்

ஒரு பெண், அதிகாரியாகப் பதவியேற்பதற்கு முன்பே அவருடைய புகைப்படங்களை முன்னிறுத்தி நடக்கும் இந்த அத்துமீறல்கள் சரியா?

மெரின் ஜோசப் செய்திருக்கும் சாதனையின் ஒரு சிறுதுளியைக் கூட உள்வாங்கிக் கொள்ளாமல் அவருடைய புகைப்படத்துக்குக் கீழே பலவித கமெண்ட்களை எழுதி குவித்து வருகிறார்கள்.

‘நீங்க அரெஸ்ட் பண்றதா இருந்தா நான் இப்பவே ஒரு குற்றத்தைப் பண்ணுவேன்’

‘எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தாலும் உங்களைப் பார்த்ததுமே சரண்டர் ஆகிடுவான்’

‘எங்க இதயத்தை அரெஸ்ட் பண்ற வாரண்ட் உங்ககிட்டேதான் இருக்கு’

‘என்னை இப்பவே கைது பண்ணுங்க’

‘லவ் யூ ஆபீஸர்’

இப்படிப் போகிறது ஆண்களின் கமெண்ட் பட்டியல்.

சில பெண்களும் ஆண்களுக்குச் சளைக்காமல் மெரினை மட்டம் தட்டி கமெண்ட் எழுதியிருக்கிறார்கள்.

‘ஏ பெண்ணே, உடனே சமையலறைக்குப் போ’

‘கொஞ்சம் அடங்குங்க மேடம்’

என்று சில பெண்கள் எழுதியிருக்கிறார்கள்.

ஒரு பெண் படித்து உயர் பதவிக்கு வந்தால் அவள் திறமையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவள் பெண் என்பதையும் அவள் அழகையும் மட்டுமே பிரதானமாக எடுத்துக்கொண்டு பேசும் இந்த மனப்போக்கை என்னவென்று சொல்வது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x