

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழக விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்ற உறுதியை ஏற்று, நெடுவாசல் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், காணொலிக் காட்சி மூலம் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் ரூ.623.56 கோடியில் நிறைவு செய்யப்பட்ட 2,603 திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதல்வர் பழனிசாமி பேசியது:
விவசாயிகளுக்கு எப்போதெல்லாம் இயற்கை இடர்பாடுகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டார். இந்த அரசு, அவரது அரசு என்பதால் விவசாயிகளை கனிவுடன் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளது.
தமிழகத்தில் மானாவாரி சாகுபடியை விவசாயிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளும் நோக்கில் மானாவாரி வேளாண்மை இயக்கம் என்ற மிகப்பெரும் திட்டம் ரூ.803 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை மையமாகக் கொண்டு, தொகுப்புக்கு 1000 ஹெக்டேர் என்ற அளவில் 1000 தொகுப்புகள் மூலம் எதிர்வரும் 4 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேரில் மானாவாரி நில மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல, புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் வணிக ரீதியில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்ய பெட்ரோலிய சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவிப்பதால் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தித் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது. எனவே, நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தமிழகத்தில் விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்தத் திட்டமானாலும் இந்த அரசு செயல்படுத்தாது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன். எனவே, மாநில அரசின் இந்த உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நெடுவாசல் கிராம பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
முன்னதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நன்றி கூறினார்.
அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எம்ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி, ஆர்.துரைக்கண்ணு, எம்பி-க்கள் ப.குமார், டி.ரத்தினவேல் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசுத் துறை செயலர்கள், அரசு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட தாய்மை நலன்- குழந்தைகள் நல மையத்தின் புதிய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து, கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் புதிய பேருந்துகளை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.