

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்துவதற்காக நடிகைகள் சிநேகா, சிம்ரன் உள் ளிட்டோர் நடித்த குறும்படங்களை தமிழக சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ளது.
தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு குறும்படங்கள் கொண்ட குறுந்தகடுகள் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கினார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி, மருத்துவமனை இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறும்படங்கள் கொண்ட குறுந்தகடுகளை வெளியிட்டார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) நாராயண பாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) கே.செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழா முடிவில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த குறும்படங்கள் பற்றி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி கூறி யதாவது:
தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்து வதற்காக மூன்று குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு குறும்படம் தொலைக்காட்சிகளி லும், மற்றொரு குறும்படம் திரை யரங்குகளிலும் திரையிடப்படும். அரசின் பிரச்சார வாகனத்தில் மூன்றாவது குறும்படம் திரை யிடப்பட்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த குறும்படங்களில் நடிகைகள் சிநேகா, சிம்ரன், நிரோஷா, நடிகர்கள் ராம்கி, இளவரசு, ரோபோ சங்கர், தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவ்வாறு க.குழந்தைசாமி கூறினார்.