

எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் நடத்தும் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் நடத்தும் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து கல்லூரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இக்கல்விக் குழுமம் ஆக்கிரமித்த தலித் மக்களுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் பஞ்சமி நிலத்தையும், பொத்தேரி ஏரி பாசனக் கால்வாய், கிராமப் பாதை உட்பட பல்வேறு அரசு நிலங்களையும் உடனடியாக மீட்டுத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறைமலை நகர் பாவேந்தர் சாலையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கட்சியின் பகுதிச் செயலாளர் பி.சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறு முகநைனார், எஸ்.கண்ணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.