

சந்தன கடத்தல் வீரப்பனின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் திருநெல்வேலி, பாளையங்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று ஒட்டப்பட்டிருந்தன.
வீரப்பனின் 10-ம் ஆண்டு நினைவேந்தலையொட்டி நாம் தமிழர் கட்சி, நெல்லை மாவட்ட வீரப்பன் வன்னியர் பாசறை ஆகிய அமைப்புகள் தனித்தனியே சுவரொட்டிகள் ஒட்டியிருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்தவர் எண்ணிக்கை குறைவு. வீரப்பன் வன்னியர் இனத்தை சேர்ந்தவர் என்பதே தென் மாவட்டங்களில் பலருக்கு தெரியாது. ஆனால் அவரின் சாதியை உணர்த்தும் வகையில், வன்னியர் பாசறையின் சுவரொட்டி இருந்தது.
வீரப்பனுக்கு வீரவணக்கம் செலுத்தி திடீரென சுவரொட்டிகளை ஒட்டியதன் காரணம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலர் வழக்கறிஞர் ச.சிவக்குமாரிடம் பேசினோம். வீரப்பன் இருக்கும்வரை, காவிரி உள்ளிட்ட தமிழகத்துக்கு எதிரான விஷயங்களில் கர்நாடகத்தினர் அமைதி காத்தனர். அவர் கொல்லப்பட்டபின் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. சந்தன மரத்தை வெட்டி கடத்தினார், யானை தந்தங்களை கடத்தினார் என்றெல்லாம் வீரப்பன் மீது பழி சுமத்தப்பட்டிருந்தது.
காட்டுக்குள்ளிருந்து வெளியே வரமுடியாத அவரிடமிருந்து, யார் யாரெல்லாம் அதை வாங்கினார்கள்? அவர்கள் மீதான நடவடிக்கைகள் என்ன? என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கின்றன. தமிழனுக்காக போராடிய பல்வேறு தலைவர்களின் நினைவு நாளிலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுவரொட்டிகளை தமிழகம் முழுக்க நாம் தமிழர் கட்சி ஒட்டுகிறது. அந்த வகையில் வீரப்பனுக்கு வீரவணக்கம் செலுத்தி சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறோம் என்றார் அவர்.