

தமிழக அரசு தொடங்கியுள்ள இலவச மருத்துவ ஆலோசனைக்கான, ‘104’ என்ற தொலைபேசி எண்ணுக்கு ஒரே நாளில் 1000 அழைப்புகள் வந்துள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜய பாஸ்கர் கூறினார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் கதிர் வீச்சுத் துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தீவிர புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடக்க விழாவில் இதை அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அரசுப் பொது மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், புற்றுநோய் கதிர் வீச்சுத் துறையை மேம்படுத்த முதல்வரின் விரிவான காப்பீடுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி பெறப்பட்டது.
அதில், ரூ.1.5 கோடியில் அதிநவீன அண்மை கதிர் வீச்சு சிகிச்சை க் கருவி வாங்கப்பட்டுள்ளது. உள் நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கை 54-ல் இருந்து 137 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 10 படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் என, 15 படுக்கைகளைக் கொண்ட புற்றுநோய் தீவிர சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
மருத்துவம் தொடர்பான தகவல், ஆலோசனைகளை இலவசமாக வழங்குவதற்காக முதல்வரால் தொடங்கப்பட்ட ‘104’ மருத்துவ சேவை தொலைபேசி எண்ணுக்கு ஒரே நாளில் 1000 அழைப்புகள் வந்துள்ளன.
தமிழகத்தில் தொற்று இல்லா நோய்களைக் கண்டறிய 14 ஆயிரத்து 462 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இதில், 7 லட்சத்து 28 ஆயிரத்து 440 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகள் மூலம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளவர்கள் அறியப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.