Published : 24 Mar 2014 07:56 PM
Last Updated : 24 Mar 2014 07:56 PM

கரசேவையை ஜெயலலிதா ஆதரித்தது உண்மையே: கருணாநிதி

கரசேவையை முதல்வர் ஜெயலலிதா ஆதரித்தது உண்மையே என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, 1999-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கான காரணத்தை விவரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று திமுகவினருக்கு கடித வடிவில் வெளியிட்ட அறிக்கை:

"கரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் என்றால், பாரதிய ஜனதாவுடன் கருணாநிதி கூட்டணி சேர்ந்தது ஏன்?" என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.

தூத்துக்குடியில் பேசிய ஜெயலலிதா, அ.தி.மு.க. ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதே இல்லை என்று கூறினார். அதற்குத்தான் நான் விளக்கமாக தேதிவாரியாகப் பதில் அளித்திருந்தேன்.

முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசியது, 24-11-1992 அன்று நாளிதழில் செய்தியாக வெளிவந்தது.

'கரசேவை : ஜெயலலிதா வலியுறுத்தல்' என்று தலைப்பிடப்பட்ட அந்தச் செய்தியில், 'ஜெயலலிதா அந்தக் கூட்டத்தில் பேசும்போது, "கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்தத் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு எடுக்க வேண்டியுள்ளது. கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறு பேசிவிட்டு, தற்போது கரசேவையை தான் ஆதரிக்கவில்லை என்றால் எது உண்மை? முதல்வரின் இந்தப் பேச்சுக்கு நன்றி தெரிவித்து, 'தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்' சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

கரசேவைக்கு தான் ஆட்களை அனுப்பவில்லை என்று ஜெயலலிதா கூறியதற்கு, அப்போது ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியையே எடுத்துக் காட்டியிருந்தேன். அந்தச் செய்தியில், உத்தரப்பிரதேச மாநில விசுவ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர், அயோத்தியில் நடைபெற்ற கரசேவைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார் என்றும், மேலும் கரசேவைக்குரிய பல உதவிகளைச் செய்வதாக உறுதியும் அளித் துள்ளார் என்று குறிப்பிட்டிருந்ததை எடுத்துக்காட்டி, "நான் கூறுவது உண்மையா? கரசேவைக்கு ஆட்களை அனுப்பவில்லை என்று ஜெயலலிதா கூறுவது உண்மையா?" என்று கேட்டிருந்தேன்.

இஸ்லாமியர்களின் நண்பராக விளங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.ஏ.அப்துல் சமத், "அயோத்தியில் நடைபெற்ற கரசேவையில் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்" என்று கூறி வெளிவந்த செய்தியையும் நான் விளக்கியிருந்தேன். இவ்வளவிற்கும் பிறகு ஜெயலலிதா தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

தற்போது கடலூர் கூட்டத்தில், கரசேவையை ஆதரித்த பா.ஜ.க.வுடன் தி.மு.க. எவ்வாறு கூட்டு வைத்துக் கொண்டது என்ற கேள்வியை ஜெயலலிதா எழுப்பியிருக்கிறார்.

கரசேவை நடைபெற்றது 6-12-1992. பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி கொண்டது 1999ஆம் ஆண்டு. ஏழு ஆண்டுகள் கழித்து, பா.ஜ.க.வுடன், தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டது என்றாலும், அதற்கான விளக்கத்தையும் வெளியிடத் தயாராகவே இருக்கிறேன்.

1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியோடு உறவு கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, ஓராண்டு காலத்திற் குள்ளாகவே 1992ஆம் ஆண்டில் கரசேவைப் பிரச்சினையில் பா.ஜ.க.வை ஆதரித்ததை ஜெயலலிதா வசதியாக மறந்துவிட்டார் போலும்.

1999ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம், பா.ஜ.க.வுடன் உறவு கொள்ள நேரிட்டதற்கு முழு முதல் காரணம் இந்த ஜெயலலிதாதான். ஆம்; 1998ஆம் ஆண்டு, பா.ஜ.க. அரசில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அதில் அங்கம் வகித்த அ.தி.மு.க., பிரதமர் வாஜ்பாயிடம், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார் என்பதையும், கடைசி வரை அதனைக் கேட்க பா.ஜ.க.வினரும், குறிப்பாக பிரதமர் வாஜ்பாய் மறுத்து விட்டார் என்பதையும் நான் ஏற்கனவே விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியையே 'தேச விரோதி' என்று ஜெயலலிதா அப்போது விமர்சித்தார். என்னுடைய பவள விழா நிகழ்ச்சியில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த பா.ஜ.க.வைச் சேர்ந்த இல.கணேசனை திட்டித் தீர்த்தார்.

28-7-1998 அன்று பிரதமர் வாஜ்பாய் எனக்கு எழுதிய கடிதத்தில், காவிரிப் பிரச்சினையிலே நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பினை அமல் படுத்துவது பற்றிப் பேசுவதற்காக 6-8-1998 அன்று முதலமைச்சர் என்ற முறையில் டெல்லிக்கு வர வேண்டுமென்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை 3-8-1998 அன்று கூட்டி, கருத்துக்களைக் கேட்ட போது, மற்றக் கட்சித் தலைவர்கள் எல்லாம் டெல்லிக்குப் போகலாம் என்று கூறிய நேரத்தில், அ.தி.மு.க. மட்டும் செல்லக் கூடாது என்றார்கள்.

டெல்லியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில்தான் நடுவர் மன்ற இடைக்கால ஆணையில் தெரிவித்திருந்த 205 டி.எம்.சி. தண்ணீர் விடப்பட வேண்டுமென்ற முக்கிய முடிவு எடுக்கப் பட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களும், நாளேடுகளும் அந்த முடிவைப் பெரிதும் பாராட்டிய நேரத்தில், ஜெயலலிதா மட்டும், "வாஜ்பாய், கருணாநிதியின் தந்திரத்திற்கு ஆளாகிவிட்டார், இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொண்டிருக்கின்ற உடன்பாட்டை நிராகரிக்கிறோம்" என்றார்.

ம.தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்த நாள் விழாப் பேரணியில் கலந்துகொள்ள வந்த வாஜ்பாயிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "அ.தி.மு.க. உறுதியான, நம்பத் தகுந்த கூட்டாளியா என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். மத்திய ஆட்சிக்கு தி.மு.க. போன்ற கட்சிகள் ஆதரவு தர முன்வந்தால், அதை நாங்கள் ஏற்போம், ஆதரவு வேண்டாம் என்று கூறமாட்டோம், ஆதரவு பற்றி தி.மு.க.வுடன் நாங்கள் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மதச்சார்பற்ற கட்சி என்று பா.ஜ.க. நிரூபித்தால், அதற்கு ஆதரவு தரத் தயார் என்று கருணாநிதி கூறியுள்ளார்" என்றெல்லாம் தெரிவித்தார்.

வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அ.தி.மு.க. திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து, 16-4-1999 அன்று மக்களவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாஜ்பாய் முன்மொழிந்தபோது, நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறன் பேசினார். அவர் பேசும்போது, "25 தி.மு.கழக எம்.பி.க்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உதவியோடு இந்திரா காந்தி தனது சிறுபான்மை அரசை அமைத்தார். இந்திரா காந்தி தி.மு.க.வின் உதவியோடுதான் மன்னர் மானியத்தை ஒழித்தார். தி.மு.க.வின் ஆதரவோடுதான் வங்கிகளை தேசிய மயமாக்கினார். நெருக்கடி நிலையின் போது நாங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி விட்டோம்.

அப்போது நாங்களும், பா.ஜ.க. உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் தோழர்களும் சிறைத் தோழர்களானோம். எங்களுடைய நீண்ட கால அரசியல் வரலாற்றில், காரணம் எதுவாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளித்து பாதுகாத்து வந்திருக்கிறோம். அவ்வாறு செய்வதற்கு நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள உறுதியை இன்று மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நேற்று வரை நான் இந்த அரசை எதிர்த்து வந்தேன். காவிரிப் பிரச்சினைச் சிக்கலைத் தீர்த்த இந்த அரசுக்குரிய பெருமையைத் தவிர, இந்த அரசின் எந்தச் சாதனைகளையும் நான் பாராட்ட முடியாது. ஆனால் அ.தி.மு.க. நண்பர்களின் ஆதரவோடு நடைபெறும் முயற்சி மாநிலத்தின் நலனுக்கும், தேசத்தின் நலனுக்கும் எதிரானது. எனவே தற்போதைய அரசு தொடர்வதை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றெல்லாம் மாறன் பேசினார்.

அதுபற்றி என்னிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஜெயலலிதாவின் ஊழலை விட மதவாதம் என்பது கொடுமையானதல்ல; அதனால் மதவாதம் இனிமையானது என்று பொருள் அல்ல. பாம்பை விட மோசம் என்று ஒரு பெண்ணையோ ஆணையோ சொன்னால், பாம்பு நல்லது என்று அர்த்தமா? பாம்புக்கும் விஷம் உண்டு என்றுதான் அர்த்தம்" என்று கூறினேன்.

மேலும், "தி.மு.கழகம் என்றைக்கும் சிறுபான்மைச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரணாகத்தான் இருக்கும், மதவெறியை மாய்ப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, அது எங்கள் குருதியோட்டத்தோடு கலந்த ஒன்று. பா.ஜ.க.வின் கொள்கையில் நாங்கள் சமரசமாகி அந்த அடிப்படையில் இந்த முடிவை எடுக்கவில்லை. தி.மு. கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் அப்படியே இருக்கின்றன.

அவற்றை அப்படியே சிந்தாமல், சிதறாமல் காப்பாற்றக்கூடிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு என்றைக்கும் உறுதியாக உண்டு.

அதே நேரத்தில், இந்தியாவினுடைய அரசியலில், ஜனநாயகத்தில், எங்களுக்கு ஒரு உறுதியான நிலை இருக்க வேண்டுமென்ற கோட்பாடும் உண்டு. வாஜ்பாயை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் ஒரு நல்ல மனிதர் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.

2-6-1999 அன்று கழகப் பொதுக்குழு கூடி நீண்ட நேரம் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்தது. அந்தப் பொதுக் குழுவில் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தில்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருகின்ற முடிவினை தி.மு.க. எடுத்தது. அதே தீர்மானத்தில், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக தி.மு.கழகம் தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியும் தெரிவிக்கப்பட்டது.

கரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் என்றால், பா.ஜ.க.வுடன் கருணாநிதி கூட்டணி சேர்ந்தது ஏன் என்று கடலூர் கூட்டத்தில் கேள்வி கேட்ட ஜெயலலிதாவுக்கு இதுதான் பதில்.

இவர் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளை கடைசி வரை நம்பவைத்து கடைசியில் கழுத்தறுத்தாரே, அதைப்போல பா.ஜ.க. கட்சியோடு 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, மத்திய ஆட்சியிலும் அங்கம் வகித்து, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் படாதபாடுபடுத்தி, கடைசியில் ஆதரவையும் விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்திருக்காவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருகின்ற நிலையே ஏற்பட்டிருக்காது.

பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்து, அவர்களை நிராதரவாக விட்டுவிட்ட நிலையில் மனிதாபிமான எண்ணத்தோடு, அதே நேரத்தில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தோடுதான் தி.மு.க. அந்த அணியோடு கூட்டுச்சேர நேரிட்டது.

பா.ஜ.க.வோடு தி.மு. கழகம் கூட்டணி சேர நேரிட்டாலும், தி.மு. கழகம் என்றைக்கும் அதன் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுத்ததில்லை; ஜெயலலிதா மத்திய ஆட்சியில் பங்கேற்ற போது பா.ஜ.க.வினருக்கு கொடுத்த தொந்தரவைப் போல தரவும் இல்லை. கரசேவைக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்ற ரீதியில் தி.மு. கழகம் என்றைக்கும் செயல்பட்டதுமில்லை.

ஆனால் ஜெயலலிதா? 4-7-1999 அன்று சென்னையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, "இஸ்லாமியச் சகோதரர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல் எப்போதும் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்கு பரிகாரமாகத்தான் பி.ஜே.பி. ஆட்சியை நானே கவிழ்த்தேன். இனி ஒருபோதும் பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டு வைத்துக் கொள்ளாது" என்று முழங்கினார்.

ஆனால் இந்த உறுதிமொழியைக் கொடுத்த ஜெயலலிதா 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதே பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்டுத் தோற்றார். அவர் எப்படி கூட்டுச் சேர்ந்தார் என்று நான் கேட்கத் தயாராக இல்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜெயலலிதா கரசேவையை ஆதரித்தார், ஆட்களை அனுப்பினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே. அதை நான் விளக்கத் தேவையில்லை. ஒவ்வொரு இஸ்லாமியச் சகோதரனுக்கும் அந்த உண்மை தெரியும். எனவே ஜெயலலிதா என்ன பொய் சொன்னாலும், அது உண்மை ஆகிவிடாது" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x