Published : 03 Oct 2014 10:20 AM
Last Updated : 03 Oct 2014 10:20 AM

தேவர் ஜெயந்தி பாதுகாப்பில் 20 ஆயிரம் போலீஸ்- அமைதியாக நடத்த புதிய அணுகுமுறை: ஐஜி தகவல்

இம்மாதம் 30ம் தேதி பசும்பொன்னில் நடக்கவுள்ள முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பில் 20 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். வாடகை வாகனங்களுக்கு அனுமதியில்லை என்பதைத்தவிர, மற்ற விஷயங்களில் கெடுபிடி காட்டாமல் அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாக தென்மண்டல ஐஜி அபய்குமார் சிங் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ல் தேவர் ஜெயந்தி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அக்டோபர் 24-ல் மருதுபாண்டியர் நினைவு நாள், அக்டோபர் 27ல் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்ச்சிகள் நடக்கும். இந்நிகழ்ச்சிகளில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பர்.

கடந்த 2011ல் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் நடந்த கலவரத்தை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6 பேர் இறந்தனர். 2012ம் ஆண்டில் தேவர் ஜெயந்தியின்போது, 3 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். இவ்விழாவிற்கு சென்று திரும்பியவர்கள் வந்த கார் மீது, மதுரை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இதனால் 2013 முதல் இந்த தலைவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவோர் வாடகை வாகனங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் கூட்டம் சேர்வதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

2013-ம் ஆண்டு பரமக்குடி, பசும்பொன், காளையார்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் கூட்டம் கணிசமாக குறைந்தது. இதனால் அசம்பாவிதமின்றி நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த மாதம், பரமக்குடியில் நிகழ்ச்சி அமைதியாக முடிந்தது. ஆனாலும் 2013ல் போலீஸாரின் கெடுபிடியை கண்டித்து, பசும்பொன் வந்த தமிழக அமைச்சர்கள் கார் மீது கற்கள் வீசப்பட்டன. இவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, கடந்த பிப்ரவரியில் பசும்பொன் வந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் அணிவித்தார்.

தற்போது தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் குருபூஜை ஏற்பாடுகள் நடந்து வருகிறது. செப்டம்பர் 8ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமார் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தென் மண்டல ஐஜி அபய்குமார் சிங் கூறியது: தேவர் குருபூஜைக்கு தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். வாடகை வாகனங்களுக்கு அனுமதியில்லை என்பது உட்பட அனைத்து கட்டுப்பாடுகளும் கடந்தாண்டே கொண்டு வரப்பட்டவைதான். அப்போது மக்களுக்கு புதிதாக தெரிந்ததால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், கடந்த ஆண்டு சிறிய அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. கட்டுப்பாடு பழகிவிட்டதால், பிரச்சினைக்கு வாய்ப்பில்லை.

கமுதி, பசும்பொன்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபயணம், பால்குடம் போன்ற நிகழச்சிகளுக்கு உள்ளூர் நிலைமையை பொருத்து அனுமதி வழங்கப்படும். சொந்த வாகனங்களில் செல்வோர், அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த வாகனங்கள் மாவட்ட எல்லையை அடையும்போது சோதனை நடத்தி, அனுமதிச் சீட்டு ஒட்டப்படும். இவை பசும்பொன் வரும்வரை சோதனை செய்யப்பட மாட்டாது. அமைதியாக விழா நடப்பது முக்கியம். இதற்கேற்ப பாதுகாப்பில் தேவையான மாற்றம் செய்யப்படும் என்றார் ஐஜி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x