எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா
Updated on
1 min read

தமிழில் 45-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய ராஜம் கிருஷ்ணனுக்கு சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடந்தது.

40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் வலம் வந்து எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் ராஜம் கிருஷ்ணன் (90). அவரது எழுத்துலக சாதனையைப் பாராட்டும் வகையில் சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

உடல்நலம் குன்றி இருக்கும் ராஜம் கிருஷ்ணன், சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி விழாவில் பங்கேற்றார். தனக்கு பாராட்டு விழா நடக்கிறது என்று முழுமையாக புரிந்துகொள்ளக்கூடிய நிலையில்கூட அவர் இல்லை. மிகவும் உணர்வுபூர்வமான அனுபவ பகிர்வுகளுடன் விழா அரங்கேறியது. தமிழில் 45 நாவல்கள் எழுதிய ராஜம் கிருஷ்ணனுடன் வாழ்ந்த, பணிபுரிந்த நண்பர்கள், அமைப்புகள் உணர்ச்சி பெருக அவர்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.பாரதி: ராஜம் கிருஷ்ணன் வெற்றி மனுஷி என்பதை நினைவுகூரவே இந்த நிகழ்ச்சி. இடதுசாரி கட்சிகள் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு: மீனவர்கள், உப்பளத் தொழிலாளிகள், தீப்பெட்டித் தொழிலாளிகள் பற்றி களப்பணியாற்றி எழுதியவர் ராஜம் கிருஷ்ணன். எவ்வளவு பண நெருக்கடி இருந்தபோதும் இரக்கப்பட்டு செய்யும் உதவியை ஏற்காதவர்.

‘புதிய தலைமுறை’ ஆசிரியர் மாலன்: 1953-லேயே குடும்பத்தில் பெண்களின் அவலத்தைப் பற்றி ‘பெண்ணின் குரல்’ என்ற நாவலோடு இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர் ராஜம் கிருஷ்ணன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் துணைவேந் தர் வி.வசந்தி தேவி: மதம் எப்படி பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்று கோயில்களுக்கு முன்பாகவே நின்று பேசியவர் ராஜம் கிருஷ்ணன்.

இவ்வாறு பலரும் அவரைப் பாராட்டிப் பேசினர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவரும் ராஜம் கிருஷ்ணனின் நெருங்கிய தோழியுமா ன மைதிலி சிவராமன் முன்னிலையில் விழா நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த ரா.தே.முத்து, எழுத்தாளர் வ.கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜம் கிருஷ்ணனை கடந்த 5 ஆண்டுகளாக கவனித்துக்கொள்ளும் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்து வர்கள், செவிலியர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in