

அட்டபாடி தேக்குவட்டை கிராமத்தில் உருவாகியுள்ள புதிய தடுப்பணையில் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு தேங்கும் தண்ணீரால் பவானி ஆற்றின் கீழ் பகுதிகளுக்கு தண்ணீர் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பவானி நதிக்கரையோரம் உள்ள மோட்டார் பம்ப்செட்டுகளுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க கேரள மின் வாரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேரள மாநிலத்தின் அட்டப்பாடி தேக்குவட்டை கிராமம்.
நீலகிரியில் உருவாகும் பவானி நதி கேரள மாநிலத்தின் அமைதிப் பள்ளதாக்கு பகுதியில் நுழைந்து இந்த கிராமத்தின் வழியே 30 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து தமிழகத்துக்குள் நுழைகிறது. இதேபோல, இதற்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் தெற்கிருந்து வடக்காக வரும் சிறுவாணி நதி 28 கிலோமீட்டர் பாய்ந்து பவானியில் கலந்து, தமிழகப் பகுதிக்கு வருகிறது.
இந்நிலையில், 1980, 2004, 2012-ம் ஆண்டுகளில் பவானியின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. இதை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழக அரசின் ஒப்புதலின்றி அணைகள் கட்டக் கூடாது என்று கேரளத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதற்கிடையில், அட்டப்பாடி பகுதியில் உள்ள வீட்டியூர், பாடவயல், மஞ்சிக்கண்டி, தேக்குவட்டை, கீரைக்கடவு, ரங்கநாதபுரம் கிராமங்களில் பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகளைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது கேரள அரசு. இதைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றதால் ஆரம்பத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ள சுனக்கம் காட்டியபோதும், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி, முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டுள்ளது கேரள அரசு.
தேக்குவட்டை கிராமத்தில் நடைபெறும் முதல் தடுப்பணைப் பணி 95 சதவீதம் முடிந்துவிட்டது. மேலும், மஞ்சிக்கண்டி பகுதியில் அடுத்த அணை கட்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘தி இந்து’வில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், கேரள மின்சாரத் துறை அதிகாரிகள், பவானி கரையோரம் உள்ள விவசாயிகள், ஏற்கெனவே பயன்படுத்தி வரும் மோட்டார் பம்ப்செட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
1.5 கி.மீ. தண்ணீர் தேக்கம்
தற்போது பணி முடியும் தருவாயில் உள்ள தேக்குவட்டை தடுப்பணையில், 75 மீட்டர் அகலம், சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், நதியின் கரைப் பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணறுகளில் 6 முதல் 8 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. புதிய அணையில் ஷட்டர்களைப் பொருத்தி, முழுமையாக தண்ணீரைத் தேக்கும்போது கிணறுகளில் நீர்மட்டம் மேலும் உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பவானி ஆற்றிலும் சரி, இங்கிருந்து 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் ஓடும் சிறுவாணி ஆற்றிலும் சரி, இருபுறமும் 3 ஹெச்.பி. முதல் 20 ஹெச்.பி வரை இழுவைத் திறனுள்ள மோட்டார் பம்ப்செட்டுகள் வைத்து நீரை உறிஞ்சி, குழாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
அட்டப்பாடியில் பவானி, சிறுவாணி பாயும் சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் தொலைவு பகுதியில் ஆயிரக்கணக்கில் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளனன. தற்போது, கேரள பகுதி பவானியில் கட்டப்படும் அணைகளில் 40 ஹெச்.பி. திறனுள்ள தலா 2 மோட்டார் பம்ப்செட்கள் இருபுறமும் பொருத்தப்பட்டு, குழாய்கள் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன் மூலம் ஒவ்வொரு தடுப்பணை மூலம் 150 ஏக்கர் முதல் 500 ஏக்கர் வரை பாசனம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, குடிநீர்த் தேவைக்கும் நீர் எடுக்கும் வகையில், புதிய குடிநீர்த் திட்டங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் இந்த நேரத்தில் இந்தப் பணிகள் நடப்பதாலும், முதல் அணையின் தண்ணீரே எதிர்பார்த்ததற்கு மேலாக தேங்கியிருப்பதாலும், இதன் மூலம் தமிழகப் பகுதியிலிருந்து மட்டுமின்றி, இந்த அணைக்கு கீழுள்ள கேரளப் பகுதி விவசாயிளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் கேரள அதிகாரிகள்.
எனவே, தற்போது சிறுவாணி மற்றும் பவானி நதிகளில் மோட்டார் பம்ப்செட்டுகள் மூலம் தண்ணீர் எடுப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகிறார்கள் அதிகாரிகள்.
கேரள மாநிலம் அட்டப்பாடி தேக்குவட்டையில் முடிவுறும் தருவாயில் உள்ள தடுப்பணை பணிகள்.
நிரந்தரமாக துண்டிக்கப்படுமா?
தாவளத்திலிருந்து பாடவயல், மஞ்சிக்கண்டி, தேக்குவட்டை பகுதிகளில் பவானி நதிக்கரையோரம் உள்ள விவசாயிகள் ‘தி இந்து’விடம் கூறியது: கடந்த 2 நாட்களாகவே இந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம அதிகாரிகள், வட்டாட்சியர் உள்ளிட்டோர், மோட்டார் பம்ப்செட்டுகளைத் துண்டிக்குமாறும், இனி ஆற்றில் தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
இதனால் ஆற்றின் நீரை நம்பி பயிரிடப்பட்ட வாழை, தென்னை, காய்கறிப் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறினால், “கிணற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யுங்கள். தற்போது வறட்சி நிலவுவதால், வரும் பங்குனி, சித்திரையில் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீருக்கு மட்டுமே இந்த நீரைப் பயன்படுத்துங்கள்” என்கிறார்கள்.
கடந்த ஆண்டும் இதேபோலத்தான் பங்குனி மாதத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அப்போது இங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாவடியூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள், அங்கு ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்று கூறி, பிரச்சினை செய்தனர்.
அங்கு தண்ணீர் வராததற்குக் காரணம், தேக்குவட்டை, பாடவயல், மஞ்சிக்கண்டி பகுதிகளில் மணல் மூட்டைகள் மற்றும் பாறைகளை வைத்து ஆற்று நீரை தடுத்திருப்பதுதான் என்று புகார் தெரிவித்தார்கள். அதையடுத்து, அதிகாரிகள் அவற்றை அகற்றினர். மேலும், அப்போது மழை பெய்ததால், பின்னர் அந்த ஊரிலிருந்து பிரச்சினை எழவில்லை.
அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல சிறுவாணி ஆற்றின் கரையோர விவசாயிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. கீழ் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் மேல் பகுதி விவசாயிகள் தண்ணீரைத் தடுக்கிறார்கள் என்று எழுந்த புகாரில், தண்ணீரைத் தடுக்க வேண்டாம் என்று மேல் பகுதி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். கோடைகாலத்தில் குடிநீர்த் தேவைக்கு மட்டும் நீர் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதேசமயம், மோட்டார் பம்ப்செட்டுகளுக்கான மின் இணைப்புகளைத் துண்டிக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது கீழ் பகுதி விவசாயிகள் பிரச்சினை செய்யவில்லை.
எனினும், கடந்த 4 நாட்களாக விவசாயிகளிடம், “மோட்டார் பம்ப்செட்டுகளைப் பயன்படுத்தி தண்ணீர் எடுக்க வேண்டாம். மின் இணைப்பைத் துண்டித்து, பியூஸ் கட்டையை எடுத்து வையுங்கள். மின்சார இலாகாவினர் வந்து அதை எடுத்துக் கொண்டு, முறையாக மின் இணைப்பைத் துண்டிப்பார்கள்” என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறு பல பகுதிகளிலும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோர விவசாயிகள் சிலருக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள அணையில் சுமார் 75 மீட்டர் தொலைவுக்கு ஆற்றின் நீர்ப் பரப்பு உள்ளது. அங்கு 1.5 கிலோமீட்டர் நீளத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. சாதாரணமாக மணல் மூட்டைகளை வைத்தாலே கீழே செல்லாத ஆற்றுத் தண்ணீர், அணைகள் கட்டித்தேக்கும்போது எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பது அதிகாரிகளுக்குத் தெரியாதா? அதனால்தான், பங்குனி மாதம் வருவதற்கு முன்பே எங்களுக்கு இப்படி உத்தரவை பிறப்பிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேபோல, இப்போது ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு மின்சாரத்தை துண்டிப்பு செய்வது கோடைகாலத்துக்கு மட்டும்தானா? அணை கட்டப்பட்டு 40 ஹெச்.பி. மோட்டார் பம்ப்செட் மூலம் அரசே தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்வதால், இந்த மின் துண்டிப்பு நிரந்தரமாக நீடிக்குமா? என்பதும் புரியவில்லை என்றனர்.
தமிழகத்துக்கு தண்ணீர் வரவில்லை
இதுகுறித்து பவானிசாகர் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தரப்பில் கூறியபோது, “பவானிசாகர் அணைக்கு பில்லூர் அணையிலிருந்து தண்ணீர் வருவது கடந்த 2 மாதங்களாக முற்றிலும் தடைபட்டுள்ளது. அதனால் பவானிசாகர் பகுதியே வறண்ட நிலையில் உள்ளது. பில்லூரில் குடிநீர்த் திட்டங்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்வதால், அங்கு நீர் மின் திட்டத்தில் உபரியாகும் நீர் மட்டுமே ஆற்றில் விடப்படுகிறது. அதை கணக்கில் கொள்வதில் அர்த்தமில்லை” என்றனர்.
பில்லூர் அணைப் பகுதியில் உள்ள அலுவலர்கள் கூறியபோது, “கேரள பகுதியில் சாவடியூர் தாண்டி பவானியில் தண்ணீர் வருவதில்லை. நீலகிரி மஞ்சூர், கெத்தை வழியாக வரும் தண்ணீர் மட்டுமே அணைக்கு வருகிறது. அதுவே குடிநீருக்கும், மின்சாரத் தயாரிப்புக்கும் பயன்படுகிறது” என்றனர்.
அகழி சிறுவாணி ஆற்றின் கரையோரத்தில் விவசாய மோட்டார் பம்ப்செட்டுகள் அமைக்கப்பட்டுள்ள அறைகள். (அடுத்த படம்) மோட்டார் பம்ப்செட்டுகளிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்.