Published : 30 Dec 2013 07:10 PM
Last Updated : 30 Dec 2013 07:10 PM

திண்டுக்கல்: அழிவின் விளிம்பில் சிறுமலை வாழைப்பழம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாரம்பரியமிக்க சிறுமலை வாழைப்பழம் முடிகொத்து நோய் தாக்குதலால் படிப்படியாக சாகுபடிப் பரப்பு குறைந்து தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, பழனி கீழ்மலை, பண்ணைக்காடு, மணலூர், காமனூர், தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூர், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் மற்றும் பெருமாள்மலை பகுதியில் விவசாயிகள் 4,300 ஹெக்டேரில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில், நல்ல ருசியும், மருத்துவ குணமும் கொண்ட சிறுமலை வாழைப்பழத்துக்கு சந்தைகளில் ஆண்டு முழுவதும் வரவேற்பு உள்ளது. இந்தப் பழம் மற்ற மலைவாழைப்பழங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

சீதோஷ்ண நிலை

இவ்வகை பழத்தை உலகில் வேறெங்கும் விளைவிக்க முடியாது. சிறுமலையின் மண்வளம், சீதோஷ்ண நிலையில் மட்டுமே இந்த மலைவாழைப்பழத்தை விளைவிக்க முடியும். அதனால், தனி ருசி, மணம் பெற்ற சிறுமலை வாழைப்பழத்துக்கு சர்வதேச அளவில் தனி புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் 16 ஆயிரம் ஏக்கரில் சிறுமலை வாழை சாகுபடி நடைபெற்றது. 1971-ம் ஆண்டு, சிறுமலை வாழையில் அஸ்வினி பூச்சிகள் மூலம் முடிகொத்து வைரஸ் நோய் பரவியதால், இந்த ரக வாழை சாகுபடி அழிவைச் சந்தித்தது. தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வாழை ஆராய்ச்சி மையம் ஆகியன இணைந்து சிறுமலையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு இந்த நோயைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டன. ஆனால், இந்நோயை இன்றுவரை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. தற்போதுவரை இந்த முடிகொத்து நோய் பரவிதான் வருகிறது.

அதனால், 16 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நடைபெற்ற சிறுமலை வாழை தற்போது வெறும் 750 ஏக்கரில் மட்டுமே நடக்கிறது. அதனால் இந்த வாழை அழிந்துவரும் பழங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தற்போது சிறுமலை வாழைப்பழம் உற்பத்திக் குறைவால், மற்ற மலைகளில் விற்கப்படும் வாழைப்பழங்களை சிறுமலை வாழைப்பழம் என போலியாக விற்கப்படுகிறது.

இதுகுறித்து சிறுமலையைச் சேர்ந்த விவசாயி முத்தையா கூறியது;

கடந்த காலத்தில் சிறுமலை வாழையை முக்கியப் பயிராக சாகுபடி செய்தோம். வாழை மரங்களுக்கு இடையில் காபி, எலுமிச்சை மரங்களை ஊடுபயிராக நட்டோம். முடிக்கொத்து நோய் வந்தபின், எலுமிச்சை, காபியை முக்கியப் பயிராக சாகுபடி செய்கிறோம். வாழையை ஊடுபயிராக மட்டும் சாகுபடி செய்கிறோம். முடிகொத்து நோயை தடுக்க மருந்தே இல்லை. அந்நோய் வந்தால் மரத்தை அழிப்பதைத்தவிர வேறுவழி இல்லை. அந்நோயை பார்க்காமல்விட்டால் பக்கத்தில் உள்ள மரங்களுக்கு பரவிவிடும். வாழையின் தலைப்பகுதிகள் கொத்துகொத்தாக பஞ்சுபோல் ஆகிவிடும். தார் போடாது. காய் காய்க்காது. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறுமலை வாழைப்பழம் சிறந்த மருந்து. நல்ல வரவேற்பு, விலை கிடைக்கிறது. ஆனால், அவற்றை உற்பத்தி செய்ய முடியவில்லை. அதனால், சிறுமலை வாழையை அழிவில் இருந்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. உற்பத்தியை அதிகப்படுத்த திட்டங்கள் தயார் செய்து வருகிறோம் என்றார்.

வெளிநாட்டினர் சதியா?

இதுகுறித்து வன உயிரினங்கள் ஆராய்ச்சியாளர் திண்டுக்கல் வனதாசன் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கூறியது:

பொதுவாக 1500 மீ. முதல் 2,500 மீட்டரில் விளையும் எந்த ஒரு பழத்துக்கும் தனி ருசி உண்டு. சிறுமலை 1,600 மீட்டர் உயரத்தில் உள்ளதால், இங்கு விளையும் சிறுமலை வாழைப்பழத்தின் ருசி வேறெங்கும் விளையும் பழத்திலும் கிடைக்காது. சிறுமலை வாழைப்பழத்தை சாப்பிட்டால் சளி பிடிக்காது. மலச்சிக்கலுக்கு நிவாரணியாக விளங்குகிறது. இந்தப்பழம் 18 நாள் வரை அழுகாது. தோல் கருக்குமே தவிர பழம் அழுகாது. இந்த வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் நுண்ணூட்டச்சத்து நிறைந்தது.

இந்தியாவைபோல், அமெரிக்கா, பிரேசில், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்ரிக்கா, தைவான், பிலிப்பின்ஸ் நாடுகளில் வாழை சாகுபடி அதிகளவு நடக்கிறது. மற்ற நாடுகளை காட்டிலும், தமிழகத்தில் விளையும் சிறுமலை மலைவாழைப்பழத்துக்கு தனி மவுசு உண்டு. அதனால், சிறுமலை வாழைப்பழத்தின் மவுசைக் குறைக்க வெளிநாட்டினர், வைரஸ் மூலம் காற்றில் பரவும் முடிகொத்து நோயை பரப்பி இருக்கலாம் என்ற சந்தேகம் நீடிக்கிறது. அதனால், அரசு தனிக்கவனம் எடுத்து அழியும் சிறுமலை வாழையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பஞ்சாமிர்தம் தட்டுப்பாட்டுக்கு சிறுமலை வாழை காரணமா?

பழனி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் கடந்த காலத்தில் சிறுமலை வாழைப்பழத்தைக் கொண்டே தயார் செய்யப்பட்டதால் நல்ல சுவையுடன் இருந்தது. தற்போது சிறுமலை வாழைப்பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பண்ணைக்காடு, பழனி கீழ்மலை விருப்பாச்சி வாழைப்பழங்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் தயார் செய்யப்படுகிறது. அதனால், முன்பிருந்த சுவை தற்போது பஞ்சாமிர்தத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது. சிறுமலை வாழைப்பழம் 18 நாள் வரை அழுகாது என்பதால் முன்கூட்டியே கூடுதல் பழங்களை வாங்கி வைத்துக்கொண்டு தட்டுப்பாடு இல்லாமல் பஞ்சாமிர்தம் தயாரித்து வழங்கப்பட்டது. மற்ற வாழைப்பழங்கள் 3 நாள், 5 நாள் வரைதான் வைக்க முடியும். இந்தப் பழங்களை கூடுதல் நாள் வைக்க முடியாததால், அடிக்கடி பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x