

புதுச்சேரி அடுத்த பாகூர் அருகே குருவிநத்தத்தில் நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் பைக்கில் பெரியார் நகர் காலனி வழியாக வேகமாக சென்றுள்ளனர்.
அப்போது பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர், அந்த இளைஞர்களை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது இருதரப்பு மோதலாக மாறியது. தகவலறிந்து வந்த போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில், நேற்றிரவு இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
பாகூர் காவல் உதவி ஆய்வாளர் விஜய குமார் மற்றும் போலீஸார் விரைந்து வந்து தடுத் தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் உதவி ஆய்வாளர் விஜயகுமார் காயமடைந்தார். இதையடுத்து, போலீஸார் வானத்தை நோக்கி 9 முறை சுட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.