Published : 24 Mar 2017 07:56 AM
Last Updated : 24 Mar 2017 07:56 AM

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு

கோவை மாவட்டம் பெரியநாயக் கன்பாளையம் அருகே கிணற்றில் விழுந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, கிரேன் மூலம் வனத்துறையினர் மீட்டனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதியில் இருந்து தண்ணீர், இரை தேடி வந்த யானைக் கூட்டம், மலை அடிவாரத்தில் உள்ள கோவனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் புகுந்தது. அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைக் கூட்டத்தை விரட்டினர். அப்போது, 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை கூட்டத்தைவிட்டு பிரிந்து சென்றது. அந்த யானை அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வறண்டு கிடந்த கிணற்றில் 50 அடி ஆழத்தில் தவறி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணி, வனச்சரகர் பழனிராஜன் உள்ளிட்டோர், யானையை கிணற்றில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக கிரேன், பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. யானைக்கு பழங்கள், தென்னை மட்டைகள், கரும்பு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

யானையின் ஆவேசத்தைக் குறைக்க, பழத்தில் மருந்து வைத்து கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை நேர மாகிவிட்டதால் யானையை மீட்கும் முயற்சி ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது நாளாக நேற்று அதிகாலை முதலே வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து வந்த கால்டை மருத்துவர் அசோகன், துப்பாக்கி மூலம் யானையின் உடலில் மயக்க ஊசி செலுத்தினார். சிறிது நேரத்தில் யானை அரை மயக்கத்தில் இருந்தது. இதையடுத்து, வனம் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி, யானையின் உடலில் பெரிய பெல்ட், கயிறு கட்டினர். பின்னர், கிரேன் மூலம் யானை வெளியில் கொண்டுவரப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு யானைக்கு உரிய மருந்து வழங்கினர். மயக்கம் தெளிந்த பின்னர், அந்த யானையை வனப் பகுதியில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x