Last Updated : 10 Oct, 2014 04:47 PM

 

Published : 10 Oct 2014 04:47 PM
Last Updated : 10 Oct 2014 04:47 PM

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் விழி பிதுங்கும் என்எல்சி ஒப்பந்தத் தொழிற்சங்க நிர்வாகிகள்

வேலை நிறுத்தப் போராட்டம் தொழிலாளர்களின் கடைசி ஆயுதம். அந்த ஆயுதத்தை தூக்கி 38 நாட்களாக போராடிவரும் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.தொழிற்சங்க நிர்வாகிகளோ புலி வாலைப் பிடித்தக் கதையாக மெல்லவும் முடியாமல், விழங்கவும் முடியாமல் விழி பிதுங்கி கையை பிசைந்த வண்ணம் தவிக்கின்றனர்.

பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் 3ம் தேதி இரவுப்பணி முதல் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 38வது தினத்தை எட்டியுள்ளது. இருப்பினும் நிறுவனத்தின் மின்னுற்பத்தியில் தொய்வு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தத் தொழிலாளர்களில் குறைந்தபட்சம் 1000 நபர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்யவேண்டும், மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற பிரதானக் கோரிக்கையை முன்வைத்து, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 3ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று ஒப்பந்தத் தொழிலாளர்களில் 90 சதவகிதம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கடந்த 38 நாட்களில் 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் பலனாக அன்ஸ்கில்டு எனப்படும் குறைந்த அனுபவம் கொண்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.370 லிருந்து, 450 வரை வழங்க நிர்வாகம் முன் வந்துள்ளது. மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும் போது பணிக்கொடை வழங்கவும், 20 நாட்கள் தொடர்ந்து பணிக்கு வந்தால் ஈட்டிய விடுப்பு எனும் சலுகையையும், போனஸூடன், கருணைத் தொகையாக ரூ.2 ஆயிரமும், குடியிருப்பு வசதிகளையும் செய்து தர முன்வந்துள்ளது.இருப்பினும் பணி நிரந்தரம் குறித்து நிர்வாகம் எதையும் கூறவில்லை.

தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பிலோ அன்ஸ்கில்டு எனும் குறைந்த அனுபவம் கொண்ட தொழிலாளிக்கு நாளொன்றுக்கு ரூ.1000 வழங்கவேண்டும் என கூறிவந்தனர். தற்போது அந்த நிலையிலிருந்து இறங்கி ரூ.850 வழங்கவேண்டும் என முன்வைத்துள்ளனர்.

என்எல்சி நிர்வாகமோ மற்ற பொதுத்துறை நிறுவனங்களை மேற்கோள்காட்டி நாளொன்றுக்கு ரூ.450 மேல் வழங்க இயலாது எனவும், மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் வழங்கப்படாத மருத்துவம், குடியிருப்பு, பணிக்கொடை உள்ளிட்டவற்றை நாங்கள் தர முன்வந்திருப்பது உணர்ந்து தொழிலாளர்கள் இதை ஏற்று பணிக்குத் திரும்பவேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிர்வாகத்திற்கும், தொழிற்சங்க நிர்வாகிகளின் கோரிக்கைக்கும் இடைவெளி என்பது பாதிக்கு பாதியாக உள்ள நிலையில், தொழிலாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது மட்டுமின்றி,பணி நிரந்தரத்திற்கான உத்திரவாதம் எதுவுமின்றி கடந்த 38 தினங்களாக ஊதிய இழப்பை ஏற்படுத்தி வெறும் 80 ரூபாய்க்காகவோ இவ்வுளவு நாட்கள் போராடினோம் என்று தொழிலாளர்கள் எதிர் கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்த வண்ணம் உள்ளனர்.

அனுபவம் வாய்ந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் குறிப்பிடுகையில், சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள பிரதானக் கட்சிகளின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு, தொழிற்சங்கத்தின் அடிப்படை புரிதல் தன்மை இல்லை எனவும், கூட்டு பேரத்தின் (Collective Bargaining) அடிப்படையில் தான் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படைக் கோட்பாடே தெரியாமல், பேச்சுவார்த்தையின் போது எல்லோரும் கோஷமாக கூச்சலிடுவதும்,முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு உரி விளக்கம் தர முடியாமலும் உடனே வெளியேறுவது என்ற போக்குடன் செயல்படுகின்றனர். இவர்களின் செயல்பாடு போதிய அனுபவமின்மையை வெளிப்படுத்துகிறது. இதனால் தான் போராட்டம் மாதக் கணக்கில் நீடித்துவருகிறது என்றார் வேதனையுடன்.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கியது சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம். இருப்பினும் நாள்தோறும் தோளோடு தோள் கொடுக்கும் தோழனாகவும், சகோதரனாகவும் விளங்கிய நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லையே என்ற மனக்குமுறல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x