

நகர்ப்புற உள்ளாட்சிகளில் 664 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,836 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஊரக உள்ளாட்சிகளில் 907 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16,979 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 பேர், கிராமப் புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 பேர் வீதம் மொத்தம் 6.50 லட்சம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுவர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலர்களை நுண் பார்வையாளர்களாக நியமிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
11,640 பேர் தகுதி நீக்கம்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை உரிய அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்க தவறுபவர்கள் மீது மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் 3 ஆண்டுகள் போட்டியிட இயலாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
இந்த வகையில் 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களில் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 11,640 பேர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 4,784 பேரும், ஊரக பகுதிகளில் 6,856 பேரும் அடங்குவர்.
மின்னணு இயந்திரம்
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஊரக பகுதிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. நகர்ப்புற பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு 34,515 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 41,418 மின்னணு வாக்குப்பதிவு கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
முதல்முறையாக, ஊரக உள்ளாட்சிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு புதிய முயற்சிகள் திட்டத்தின்கீழ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.