போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்து பல லட்ச ரூபாய் மோசடி: இலங்கை தம்பதி கைது

போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்து பல லட்ச ரூபாய் மோசடி: இலங்கை தம்பதி கைது
Updated on
1 min read

இலங்கையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்து தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் வேலை வாங்கித் தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி செய்த இலங்கையைச் சேர்ந்த தம்பதி உட்பட 3 பேரை வெல்லத்தூவல் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஆனைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (48). இவர் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் தான் அரசுடைமை வங்கி சென்னை கிளையில் தென்மண்டல மேலாளராகப் பணியாற்றி வருவதாகவும், வங்கியில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, பலரிடம் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்தாராம். ஆனால், சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை, இதனால் பணத்தை இழந்தவர்கள் வெல்லத்தூவல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து, நேற்று பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பிரபாகரன் இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது மனைவி சாந்தி(38), மகள் பிரசாந்தி (18)ஆகியோருடன் சேர்ந்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போலி பாஸ்போர்ட்டில் தமிழகம் வந்துள்ளார். பின்னர், கோவை மாவட்டம் வால்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி பல்வேறு இடங்களில் பண மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆனைக்கால் பகுதியில் குடியேறினார். அப்பகுதி மக்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளார். இதற்கு அவரது மனைவி, மகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதையடுத்து அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அவர் தேவிகுளம் முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து கோவை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in