கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர்பி விடுதலையை எதிர்த்து ஆட்சியர் மேல்முறையீடு

கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பிஆர்பி விடுதலையை எதிர்த்து ஆட்சியர் மேல்முறையீடு
Updated on
2 min read

கிரானைட் கற்களை அரசுடமை யாக்கக் கோரிய வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் ஆகியோரை விடுதலை செய்து மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலூர் பகுதிகளில் சட்டவிரோத மாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமை யாக்கக் கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மதுரை ஆட்சியர்களால் இதுவரை 98 வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர்கள் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் பி.சுரேஷ்குமார் ஆகியோருக்கு எதிராக இரு வழக்குகள், கிரானைட் அதிபர் ராம.சகாதேவன் ஆகியோர் மீது ஒரு வழக்கு என 3 வழக்குகளை 2013-ல் ஆட்சியராக இருந்த அன்சுல்மிஸ்ரா மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த 3 வழக்குகள் மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி முன்பு 29.3.2016-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 வழக்குகளை யும் நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்து, பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார், ராம.சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து உத்தர விட்டார்.

மேலும் அவர் தனது உத்தரவில், வழக்கு தாக்கல் செய்த காலத்தில் ஆட்சியராக இல்லாமல் அன்சுல் மிஸ்ரா ஆட்சியர் அந்தஸ்தில் வழக்கு தாக்கல் செய்ததாகவும், அவர் ஆட்சியராக இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி அரசு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்து அன்சுல் மிஸ்ராவுக்கு உதவி புரிந்துள்ளனர். இதனால் அன்சுல் மிஸ்ரா, அரசு வழக்கறிஞர்கள் இருவர் மீது அரசின் அனுமதி பெற்று குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் நீதித்துறை நடுவராக இருந்த மகேந்திரபூபதிக்கு, கிரானைட் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்தது.

இந்த சூழலில் கிரானைட் வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட 3 பேரை விடுதலை செய்ததும், வழக்கு தொடர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதால் அவரது இந்த உத்தரவு நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மகேந்திரபூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்துக்குப் புதிய நடுவர் நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார் ஆகியோரை விடுதலை செய்து மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அதில், சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் எதிரிகளால் சட்டப்பூர்வமாக எடுத்த தாக நீதித்துறை நடுவர் அவராகவே முடிவுக்கு வந்துள்ளார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது அன்சுல் மிஸ்ரா ஆட்சியராக இல்லை என நடுவர் கூறியது தவறு.

கனிமவளத் துறை துணை இயக்குநர், நில அளவையர் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ள னர். இந்த சாட்சியங்களை நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பிடம் போதிய ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளன.

இவற்றை பரிசீலித்து எதிரிகளுக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் எதிரிகளுக்கு சாதகமாக நீதித் துறை நடுவர் செயல் பட்டுள்ளார். இதனால் நீதித்துறை நடுவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதித்துறை நடுவரின் உத்தரவை எதிர்த்து நேரடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய லாமா? அல்லது அமர்வு நீதி மன்றம் தான் செல்ல வேண்டுமா? என்பதற்கு சில வழிகாட்டுதல்கள் உள்ளன. அவற்றை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தர விட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in