

மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தி உள்ளார்.
நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜரின் 114-வது பிறந்த நாள் விழா கல்வித் திருவிழாவாக விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் வர வேற்றார்.
நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “நான் மருத்துவராகக் காரணம் காம ராஜர்தான். மருத்துவப் படிப்பில் சேர நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் உள்ள ஒருவர் என்னிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அவ்வளவு தொகை இல்லை என்று கூறினேன். அடுத்த நாள் நான் நேர் முகத் தேர்வுக்குச் சென்றபோது பணம் கேட்டவர் அங்கு இல்லை. பலரிடம் அவர் லஞ்சம் கேட்ட தகவல் அறிந்த அப்போதைய முதல்வர் காமராஜர் குறிப்பிட்ட அந்த நபரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டார். நேர்மையாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. எனக்கும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு உள்ள தொழிற்சாலைகள், நீர்த்தேக்கங்கள், அணைகள் அனைத்தும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கப் பட்டன” என்றார்.
அதைத் தொடர்ந்து கனிமொழி எம்பி பேசும்போது, “கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்து ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறச் செய் தவர் காமராஜர். அதனால்தான் தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை இன்று உயர்ந்துள்ள து. கல்வி மட்டுமல்லாது மதிய உணவு திட்டத்தையும் காமராஜர் கொண்டு வந்தார்.
நாடு முழுவதும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்துக்கு மத்திய அரசு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்” என்றார்.