Published : 29 Dec 2013 01:08 PM
Last Updated : 29 Dec 2013 01:08 PM

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி?: 5-ம் தேதி பொதுக்குழுவில் தேமுதிக முடிவு

தேமுதிக பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த பொன்னேரி யில் ஜனவரி 5 ம் தேதி நடக்கிறது. இதில், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று கட்சியினரிடம் விஜயகாந்த் கருத்து கேட்கிறார்.

தமிழக அரசியல் கட்சிகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. யார், யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயன்று வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவேன் என்றும், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடமும் முக்கியப் பிரமுகர்களிடமும் கருத்து கேட்டுத்தான் முடிவு செய்வேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கட்சியினரின் கருத்தை அறிவதற்காக பொதுக்குழுக் கூட்டத்தை ஜனவரி 5-ம் தேதி கூட்டியுள்ளார். இதில் கூட்டணி குறித்து கட்சியினரின் கருத்துக்களை விஜயகாந்த் கேட்டறிகிறார்.

இதுதொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், வரும் 5-ம் தேதி காலை 9 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சின்னம்பேட்டில் உள்ள எல்.கே.எஸ். கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இதில், கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு ஆக்கப் பணிகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து சிறப்புரை ஆற்றுகிறார்.

தலைமை நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், அணிகளின் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கர்நாடகம், மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, அந்தமான், கேரளா ஆகிய மாநில செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்ப போதிய கால அவகாசம் இல்லாததால், இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்று, செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x