Published : 27 Jan 2014 10:10 AM
Last Updated : 27 Jan 2014 10:10 AM

தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது

தமிழக – இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று காலை 10 மனிக்கு தொடங்கியது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பதும் தாக்குவதும் மீன்பிடி படகுகள், மீன்களை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வள இயக்ககத்தின் கூட்ட அரங்கில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் சுசித்ரா துரை, இலங்கை மீன்வளத் துறை டைரக்டர் ஜெனரல் நிமல் ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் தரப்பில் நாகப்பட்டினம், தஞ்சாவூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் மீனவப் பிரதிநிதிகள் 12 பேரும், இலங்கை தரப்பில் 10 மீனவர்கள் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது போல், இன்றைய பேச்சுவார்த்தையின் போது:

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லை பாரபட்சமின்றி இருதரப்பு பரஸ்பர 4நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை வலியுறுத்துதல்.

முந்தைய இந்திய-இலங்கை கலந்தாய்வின்போது ஒப்புக்கொள்ளப்பட்டவாறு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் நீண்டகால சிறைவாசம் மற்றும் இலங்கை அதிகாரிகளால் மீன்பிடிப்படகுகள் / உபகரணங்களை பறிமுதல் செய்தல் மற்றும் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை கைவிடுதல்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை அவர்களது படகுகளுடன் விரைவாகவும், சுமூகமாகவும் நாடு திரும்புவதற்கான வழி வகைகள் குறித்து விவாதித்தல்.

பாரம்பரிய கடல் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உகந்த மீன்பிடி முறைகளை தெரிவித்தல்.

முக்கிய தகவல்களான ஆபத்துக்கால நிகழ்வுகள், சுற்றுச்சூழலுக்குகந்த மீன்பிடிப்பு முறைகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை இருதரப்பினரும் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாக் நீரிணைப்புப் பகுதியில் மீன் மற்றும் மீன்வளங்களை நீண்டகால வாழ்வாதாரத்திற்கு உகந்த வகையிலும், மீன்பிடிப்பினை சாத்தியமான தொழிலாக மேற்கொள்ளும் வகையிலும் சாத்தியக்கூறுகளை கண்டறிதல், ஆகிய 5 அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x