நாகையில் கோமாரி தாக்குதலால் மாடுகள் பலியாவது நீடிக்கிறது

நாகையில் கோமாரி தாக்குதலால் மாடுகள் பலியாவது நீடிக்கிறது
Updated on
1 min read

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோமாரி நோய் தீவிரம் குறை யவில்லை. எவ்விதச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் கால்நடைகள் பலியாவது தொடர்வதால், கால்நடைத் துறையினர் விழி பிதுங்கிய நிலையில் தவிக்கின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கால்நடைத் துறை இயக்குநர் இரண்டு முறை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். 200-க்கும் அதிகமான கால்நடை மருத்துவர்கள் என மிகப் பெரிய மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ள நிலையிலும், கால்நடைகள் இறப்பு தொடர்கிறது.

இது குறித்துக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியது: கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்கு இருமுறை ஊசி போட்டனர். ஆனால், மாடுகள் இறந்து கொண்டேயிருக்கின்றன. எந்தச் சிகிச்சைக்கும், ஊசிக்கும் கோமாரி நோய் கட்டுப்படவில்லை” என்றார் அவர்.

இந்த மாதம் 10-ம் தேதி வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,247 மாடுகள் கோமாரி நோய் தாக்குதலால் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. ஆனால், தரங்கம்பாடி வட்டத்தில் மட்டும் 1,400 மாடுகள் இறந்துள்ளதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய வட்டங்களையும் சேர்த்து மொத்தம் 3,000 மாடுகளுக்கு மேல் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கோமாரி நோய் தாக்குதலில் உள்ள உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கக் கால்நடைத் துறை மறுப்பதாலேயே இந்தளவுக்கு இழப்பு ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாவட்டக் கால்நடைத் துறை இணை இயக்குநர் ராஜசேகரன் கூறியது: “கோமாரி நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்பது 100% உண்மை. தீவிர நோய் தாக்குதல் இருந்த கிடாரங்கொண்டானில் கால்நடை இறப்பு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. குணமடைந்த கால்நடைகளுக்கு மீண்டும் நோய் தாக்குதல் ஏற்படுவது தான் இப்போது எழுந்துள்ள சிக்கல். இறந்த மாடுகளுக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தி, மாதிரிகளைச் சென்னை, வாணியம்பாடிக்கு ஆய்வக்கு அனுப்பியுள்ளோம். ஓரிரு நாளில் கால்நடை இறப்பு அனைத்துப் பகுதிகளிலும் கட்டுப்படுத்தப்படும்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in