

புன்னக்காயல் மீனவர் கிராமத்தில் ரூ. 8.47 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் தொடக்க விழா, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், புன்னக்காயல் என்றாலே அனைவரும் மீன்பிடி தொழில் செய்பவர்களாகவே உள்ளனர். நெடுங்காலமாக மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக தாமிரவருணி முகத்துவாரத்தில் அவ்வப்போது மணல் திட்டுக்கள் உருவாகி வருகின்றன.
40 ஆண்டு காலமாக மீனவர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் இப்பிரச்சினை, தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மீனவர்களுக்கு உதவும் வகையில், ரூ. 8.47 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீனவர்கள் எளிதாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லலாம். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்க, இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். என்றார்.
தொல்லை தந்த மணல் திட்டுகள்
தாமிரவருணி ஆறு, மன்னார் வளைகுடாவில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில், ஆற்றின் வேகத்தால், கடலுக்குள் மணல் திட்டுக்கள் உருவாகி வருகின்றன. இதனால், மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்லும் போது, திட்டுக்களில் சிக்கி, விபத்துக்கு உள்ளாகி விடும். அரசை எதிர்பாராமல், இம்மணல் திட்டுக்களை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மீனவர்களே, தங்கள் செலவில் அப்புறப்படுத்தி வந்தனர்.
பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், தூண்டில் வளைவு அமைக்கப்படுகிறது.
தாமிரவருணி ஆற்றின் முகத்துவாரத்தில் அமையவுள்ள இந்த தூண்டில் வளைவு, வடக்கு பக்கம் 300 மீட்டர் நீளத்திலும், தெற்கு பக்கம் 400 மீட்டர் நீளத்திலும் அமைய உள்ளது. இடையில் 100 மீட்டர் அகல நீர்ப்பாதை அமைய உள்ளது. இனி வரும் காலங்களில் நீர்ப்பாதையில் மணல் திட்டு உருவாவது தடைபடும்.