

அரசு மற்றும் மக்கள் அமைப்புகளை ஒருங்கிணைத்து நீராதாரங்களை மீட்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டால், வைகையின் வளம் மீண்டும் திரும்பும் என ‘மகசேசே’ விருது பெற்றவரும் தண்ணீர் மனிதர் என அழைக்கப்படுபவருமான ராஜேந்திரசிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேந்திரசிங் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு யாத்திரையை கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் தொடங்கினார். மதுரைக்கு நேற்று வந்த அவர் காலையில் திருவேங்கடத்தில் தண்ணீர் யாத்திரையை தொடங்கி னார்.
பின்னர், மாலையில் மதுரைக்கு வந்த அவர் வைகையாற்றின் மைய மண்டபத்தில் நீரியல் ஆர்வலர்களுடன் கலந்துரையாடினார்.
அவர் பேசும்போது, நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வைகை போன்ற நதிநீர் வளங்களை மீ்ட்டெடுக்க அனைவரும் ஒன்றி ணைய வேண்டும்.
அரசு, தனியார் மற்றும் தனிநபர்களால் நம் வளங்கள் அனைத்தும் பல்வேறு வகையில் சூறையாடப்பட்டு வருகின்றன. இவற்றை மாற்றுவதற்கு சில ஆண்டுகள் ஆகும். எனவே 12 ஆண்டுகள் எனக் காலநிர்ணயம் செய்துள்ளோம். ஒவ்வொருவரிடமும் உள்ளார்ந்த ஈடுபாடு, அக்கறை இருந்தால் வைகையின் பழைய வளத்தை கண்டிப்பாக மீட்டெடுக்க முடியும். இதன் மூலம், வைகையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும் நிலையைக் கொண்டுவர முடியும் என்றார்.
தமிழக ஒருங்கிணைப்பாளர் களில் ஒருவரான குருசாமி கூறியதாவது: பல்வேறு வரலாற்றுத் தடங்களை சுமந்து கொண்டிருக்கும் மாபெரும் நதி வைகை. சிலப்பதி கார வரலாற்றோடு வைகை பின்னிப் பிணைந்துள்ளது. இவற்றை மீட்டெடுக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சாத்தி யமாக்கும் வல்லமை நீரியல் ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர் களுக்கு உண்டு என்றார்.
ஜூன் 2-ம் தேதி தனது தண் ணீர் யாத்திரையின் அனுபவங் களையும், நீர்வள ஆதாரங் களை மீட்டெடுப்பது தொடர்பான கோரிக்கையையும் தமிழக முதல் வரிடம் தெரிவிக்கவுள்ளார்.
விதைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யோகேஷ் கார்த்திக், பழங்குடிகள் நல மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
யார் இந்த தண்ணீர் மனிதர்
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில் (1959) பிறந்தவர் ராஜேந்திர சிங். இவரது தந்தை விவசாயி. ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் கற்றார். அரசு பணியில் இருந்து ராஜினாமா செய்த இவர் பின்னர் ராஜஸ்தான் சென்று தனது சொந்த முயற்சியால் 7 நதிகளை அழிவில் இருந்து மீட்டார். மழைநீர் சேகரிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளை கட்டியுள்ளார். 1,200 கிராமங்களை தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றி உள்ளார். இவரது வழிகாட்டுதலால் பல மாநிலங்களில் தண்ணீர் புரட்சி உருவானது.
ராமன் மகசேசே விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, நீர் மேலாண்மைக்கான நோபல் என குறிப்பிடப்படும் ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு உள்ளிட்ட பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார். இவர் தற்போது தேசிய கங்கைப் படுகை ஆணையத்தின் உறுப்பினராக செயல்படுகிறார். ‘உலகைக் காப்பாற்றும் 50 பேரில் ஒருவர்’என ‘தி கார்டியன்’ பத்திரிகை இவருக்கு புகழாரம் சூட்டி உள்ளது.