

‘ஹுத்ஹுத்’ புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே உருவான ‘ஹூத் ஹூத்’ புயல் வெள்ளிக் கிழமை விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கில் 530 கி.மீ தூரத்தில் மையம்கொண்டிருந்தது. இது சனிக்கிழமை அதிதீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘ஹுத்ஹுத்’ புயலால் ஆந்திர மாநிலத்துக்கு பலத்த சேதம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. தமிழகத்துக்கு இதனால் பாதிப்பு இல்லையென்றாலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், தஞ்சாவூர் மாவட்டம் மடுக்கூர் ஆகிய இடங்களில் 5 செ.மீ, திருவாரூர் மற்றும் சிவகங்கையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.