

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விரைவில் விடுதலை யாக வேண்டி மதுரையில் 3 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா விரைவில் விடுதலை பெற வேண்டும். ஆரோக்கியத்துடன் அவர் வாழ வேண்டும் என வேண்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுரை நேதாஜி சாலை யிலுள்ள பாலதண்டபாயுதபாணி கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி யானைக்கல் அருகே, வைகை ஆற்றிலிருந்து அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் மனைவி ஜெயந்தி உட்பட 3 ஆயிரம் பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். 12-வது வட்ட அதிமுக தொண்டர் ராமர் பறவைக்காவடி எடுத்து வந்தார். 10-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சுமார் 10 அடி நீள அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த அதிமுக வட்டச் செயலர் எம்ஜிஆர் நாகராஜ் தனது முதுகில் கம்பிகளை குத்தி அதன் மூலம் தேரை இழுத்து வந்தார்.
இவர்களுடன் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி. மற்றும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் யானைக்கல், வடக்கு மாசி வீதி, மேலமாசி வீதி வழியாகச் சென்று பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு குடம், தேங்காயும், காவடி எடுத்தவர்களுக்கு வேட்டிகளும் அதிமுகவினரால் இலவசமாக வழங்கப்பட்டன. இவைதவிர அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.