

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்காதவாறு அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் செயலாளர் எஸ். ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
"ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் கடையடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்தப் போராட்டங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களைத் தடுக்க காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கல்வி நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டம், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்" என்று அவர்கள் மனுக்களில் கோரியுள்ளனர்.
இந்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர். மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக மனுதாரர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ். மூர்த்தி, "நாளை (அக்டோபர் 7) வேலை நிறுத்தம் நடத்துவதாக அறிவித்த தனியார் பள்ளிகள் சங்கம் அந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டது. அதனால் செவ்வாய்க்கிழமை பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்" என்று உறுதியளித்தார்.
அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கான எல்லாவித நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.