பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு நிதியில் ஆண்டுக்கு ரூ.20 கோடி முறைகேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு நிதியில் ஆண்டுக்கு ரூ.20 கோடி முறைகேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு
Updated on
2 min read

பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு நிதியில் ஆண்டுக்கு ரூ.20 கோடி முறைகேடு செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அறம் மற்றும் நன்னெறியை கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடங்கள் ஊழலின் உறைவிடமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கொள்ளையடிப்பது பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் மூலம் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பள்ளிக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வாங்கவும், கல்வி வளர்ச்சி சார்ந்த பிற பணிகளுக்காகவும் இதை செலவிடலாம். எந்தெந்த பணிகளுக்காக இந்நிதியை செலவிடலாம் என்பதை தீர்மானிப்பதற்காக பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையிலான இக்குழுவில் உதவித் தலைமை ஆசிரியர், பெற்றோர்-ஆசிரியர் சங்கப் பிரதிநிதி, உள்ளாட்சி உறுப்பினர், தொண்டு நிறுவன பிரதிநிதி என 5 பேர் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களின் ஒப்புதல் பெற்றுத் தான் நிதி செலவிட முடியும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிதி கட்டுப்பாடற்ற முறையில் அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு நெருக்கமான நிறுவனத்தில் இருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விஞ்ஞானப் பொருட்கள் (Scientific Things) என்ற பெயரில் ஒரு பெட்டி அனுப்பப்படும். அந்தப் பெட்டியில் எதற்கும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் மொத்த மதிப்பு சில நூறு ரூபாய்களைத் தாண்டாது.

ஆனால், அவை உலகத்தரம் வாய்ந்தவை என்றும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத அப்பொருட்களின் மதிப்பு ரூ.25,000 என்றும் கூறி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து அதிகாரபூர்வமற்ற முறையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பப்படும். அதையேற்று அனைத்து பள்ளிகளிலும் உள்ள பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுவின் நிதியிலிருந்து விஞ்ஞான பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு தலா ரூ.25,000 வழங்கப்படும். அந்நிறுவனம் பொருட்களுக்கான விலை மற்றும் கமிஷனாக சில ஆயிரங்களை எடுத்துக் கொண்டு மீதத்தை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்து விடும்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் கடந்த 2009-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது தொடங்கி 8 ஆண்டுகளாக இந்த ஊழல் நடைபெற்று வருகிறது. விஞ்ஞான பொருட்கள் என்ற பெயரில் வாங்கப்படும் பொருட்கள் மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. ரூ.1000 கூட மதிப்பில்லாத அந்தப் பொருட்கள் ஊழல் செய்வதற்காகவே ரூ.25000க்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு ஊழல் செய்யப்படும் பணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வரை பங்கு செல்வதாக அத்துறை அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர்.

சில நேர்மையான தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு உறுப்பினர்களும் இந்த ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பணியிட மாற்றம், விசாரணை போன்ற வழிகளில் கடுமையான பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் இன்றைய நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 8000 ஆகும். ஒரு பள்ளிக்கு ரூ.25,000 என வைத்துக் கொண்டால் 8000 பள்ளிகளிலும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.20 கோடி அளவுக்கு ஊழல் செய்யப்படுகிறது.

பள்ளிகளில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 நிதி வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அரசு பள்ளிகளை ஆக்கபூர்வமான வழிகளில் மேம்படுத்த முடியும். ஆனால், இதிலும் கூட ஊழல் செய்து பணம் பார்க்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முயல்வது மிகக்கடுமையாக கண்டிக்கத்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் தமிழகத்தின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர். ஊழல் நிறைந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை சீரமைத்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பதவியேற்ற பின்னர் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படியான 25% மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முறையில் நடத்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். இவை பாராட்டத்தக்கவை ஆகும். அதேபோல், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு நிதியில் நடைபெறும் ஊழலைக் களையவும், இதுவரை நடந்த ஊழலுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in